சென்னை: ஒப்பந்த முறையில் அரசு பணிகளில் ஆள் சேர்க்க வழிவகை செய்யும் அரசாணை என் 115ஐ திரும்ப பெற வேண்டும் என தமிழகஅரசுக்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாசும், சமூகநீதிக்கு எதிரான அரசாணை 115ஐ ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளார்.


தமிழக அரசு சார்பில் அண்மையில், மனித வள மேலாண்மை துறை அரசாணை 115 எனும் விதியை கொண்டுவந்தது. இந்த விதிப்படி மனிதவள சீர்திருத்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பரூக்கி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவானது, அரசு பணிகளில், திறன் அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்ப ஆய்வு மேற்கொள்வது. டி மற்றும் சி பிரிவு பணிகளுக்கு வெளிமுகமை மூலம் பணியாட்களை நியமிக்க சாத்திய கூறுகளை ஆராய்வது, வெளிமுகமை ஆள்சேர்ப்பு நிறுவனங்களை ஆராய்ந்து அதன் மூலம் அரசு பணியிடங்களை நிரப்புவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய்வது என பல்வேறு ஆய்வுகளை மேற்கண்ட குழு மேற்கொள்ள உள்ளது.

தமிழக அரசு மேற்கொள்ள உள்ள இந்த ஆய்வு குறித்து எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை மூலம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அதுபோல பாமக தலைவர் அன்புமணி ராமதாசும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அள்ளி வழங்கி புறவாசல் வழியே ஆட்சியைப் பிடித்த இந்த திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கு தொடர்கதையாகி வருகிறது. திமுக ஆட்சிக்கு வர முன்களப் பணியாளர்களாக செயல்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பட்டை நாமம் தீட்டும் வகையிலும், படித்த ஏராளமான இளைஞர்களின், அரசு வேலை என்ற கனவில் மண்ணை வாரிப் போடும் வேலையில் தற்போது இந்த அரசின் முதல்வர் மு.க. ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவேன் என்று தேனொழுக தேர்தல் நேரத்தில் பேசி, திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று கைகழுவிவிட்டார். மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தியபோதெல்லாம், அம்மாவின் அரசு உடனுக்குடன் முன் தேதியிட்டு வழங்கிய அகவிலைப்படி உயர்வை இந்த திமுக அரசு நிறுத்தியுள்ளது.

ஆண்டாண்டு காலமாக அரசு பணிக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், காவலர் தேர்வு வாரியம் போன்ற அரசு ஏஜென்சிகள் மூலமாகவும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இப்படி அரசு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதன் மூலம் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா கொண்டுவந்த 69 சதவீத இட ஒதுக்கீடு அரசு வேலைவாய்ப்புகளில் கடைபிடிக்கப்படுகிறது. இதன் மூலம் சமூக நீதி உறுதி செய்யப்படுவதோடு, நேர்மையான முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த அரசு, இனி அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இப்படி தனியார் நிறுவனங்கள், ஆட்களை பணியமர்த்துவதன் மூலம் 69 சதவீத இட ஒதுக்கீடு என்ற உன்னத திட்டத்தை குழி தோண்டி புதைக்கும் வேலையில் இந்த விடியா அரசு இறங்கியுள்ளது என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

இதற்காக, தமிழக அரசின் மனித வள மேலாண்மைத் துறை அரசாணை எண். 115 என்ற ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆணையின்படி மனித வள சீர்திருத்தக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆ.கு. பரூக்கி தலைமையிலான இந்த குழு ஆறு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் ஆய்வு வரம்புகள் தமிழகத்தில் படித்த இளைஞர்களின் எதிர்கால அரசு வேலை என்ற கனவுகளுக்கும், 69 சதவீத இட ஒதுக்கீடு என்ற சமூக நீதிக்கும் மூடுவிழா காண்பதாக உள்ளது.

அரசின் பல்வேறு நிலைப் பணியிடங்களை திறன் அடிப்படையில், ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான முறைகளை மேற்கொள்வது, சி பிரிவு டி மற்றும் சி பிரிவு பணியிடங்களை வெளிமுகமை மூலம் நிரப்புவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வது, தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற மூன்றாவது முகமை அதாவது, வெளி முகமை ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பட்டியலிட்டு, பல்வேறு நிலை மனித வள அரசுப் பணியிடங்களை, அவற்றைக் கொண்டு நிரப்புவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வது, அரசின் உயர்நிலைப் பணியிடங்களை தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிட்டு அப்பணியிடங்களின் வேலைத்திறன் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றை ஆராய்தல் போன்ற சில ஆய்வு வரம்புகள் மிகவும் கவலைஅளிப்பதாக உள்ளது.

இந்த உத்தரவு பணியாளர் விரோத நடவடிக்கை மட்டுமல்லாது, சமூக நீதிக்கும் எதிரானதாகும். அரசு வேலைக்காக இரவும் பகலும் படிக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்கால கனவில், அடிவேரில் திராவகம் ஊற்றி பொசுக்கச் செய்யும் இந்த குதர்க்கவாத விடியா அரசின் செயலை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழக அரசின் மனித வள மேலாண்மைத் துறை அரசாணை எண் 115-ஐ பெரும்பாலான அரசு ஊழியர் அமைப்புகளும் எதிர்க்கின்றன. படித்த இளைஞர்களின் வருங்காலத்தைப் பாழாக்கும் இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்த அரசின் பொம்மை முதலமைச்சரை வற்புறுத்துகிறேன். வழக்கம் போல் மவுன சாமியாராக நாடகமாடினால், பாதிக்கப்படும் படித்த இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துணை நிற்கும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன் என வலியுறுத்தி உள்ளர்.

தமிழக அரசு இந்த 115 விதியை நீக்க வேண்டும் என பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில்,  “தமிழக அரசுப் பணிகளுக்கான ஆள் தேர்வு மற்றும் பயிற்சிகளில் மாற்றங்களை செய்தல், நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல் தனியார் நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் பணியாளர்களை பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது. நிரந்தரப் பணிகளையும், சமூக நீதியையும் ஒழிப்பதற்கு வழிவகுக்கக் கூடிய தமிழக அரசின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது.

அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியச் செலவுகள் அதிகரித்து வருவதால், அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஆள் சேர்ப்பு மற்றும் பயிற்சிக்கான விதிகளை மாற்ற மனிதவள சீர்திருத்தக் குழு அமைக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை செயல்படுத்தும் வகையில், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் எம்.எப் பரூக்கி, சி.சந்திரமவுலி, தேவ. ஜோதி ஜெகராஜன் உள்ளிட்ட ஐவர் அடங்கிய மனிதவள சீர்திருத்தக் குழுவை 18.10.2022-ஆம் நாளிட்ட 115 எண் கொண்ட அரசாணை மூலம் தமிழக அரசு அமைத்துள்ளது.

இந்தக் குழுவுக்கு உதவுவதற்காக தில்லியைச் சேர்ந்த பொதுக்கொள்கை மையம் (Centre for Policy Research) நியமிக்கப்பட்டிருக்கிறது. மனிதவள சீர்திருத்தக் குழுவுக்கு தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள பணி வரம்புகள் தான் அச்சமளிப்பவையாகவும், கவலையளிப்பவையாகவும் உள்ளன. அரசு ஊழியர்களின் பணித்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி முறையில் மாற்றங்களையும், மேம்பாடுகளையும் செய்வது வரவேற்கத்தக்கதும், அவசியமானதும் ஆகும்.

அதே நேரத்தில் ஆள்தேர்வு முறையில் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்களை சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமனம் செய்தல், தனியார் முகமைகள் மூலம் சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு குத்தகை முறையில் பணியாளர்களை பெறுதல், சில பணிகளுக்கு நேரடியாக நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல், முதலில் தற்காலிக பணியாளர்களாக நியமித்து பின்னர் அவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து பணி நிலைப்பு வழங்குதல் ஆகிய திட்டங்களை செயல்படுத்துவது பற்றி பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது மனிதவள சீர்திருத்தக்குழுவுக்கு தமிழக அரசு அளித்திருக்கும் பணிகள் ஆகும்.

இதற்கான பரிந்துரைகளை அடுத்த 6 மாதங்களில் மனிதவள சீர்திருத்தக்குழு அரசிடம் வழங்கி, அவை நடைமுறைபடுத்தப்பட்டால், அரசு பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு தானாகவே அழிந்துவிடும். தமிழக அரசு விதிகளின்படி நிரந்தர பணிகளுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது; தற்காலிக, ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதில்லை. மனிதவள சீர்திருத்தக்குழுவை அரசு அமைத்திருப்பதன் நோக்கமே பெரும்பான்மையான பணியிடங்களை மிகக்குறைந்த ஊதியத்தில் தற்காலிக அடிப்படையிலும், குத்தகை அடிப்படையிலும் நியமிப்பது தான் என்பதால், அந்த நியமனங்களில் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படாது.

அது சமூகநீதிக்கு சாவுமணி அடித்து விடும். பல்கலைக்கழகங்கள், மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் டி பிரிவு பணியாளர்கள் ஏற்கனவே தனியார் நிறுவனங்கள் மூலம் குத்தகை அடிப்படையில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். பல தருணங்களில் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்திருக்கிறது. இதே முறையை அனைத்துத் துறைகளுக்கும் நீட்டிக்கவும், சி பிரிவு பணிகளுக்கு விரிவுபடுத்தவும் அரசு திட்டமிட்டிருக்கிறது. இது நடைமுறைக்கு வரும் போது, 90% அரசு பணிகளுக்கு நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள்; அந்த 90% பணிகளுக்கும் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்படும் போது இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படாது.

சமூகநீதியின் தொட்டிலான தமிழகத்தில் சமூகநீதியை சீரழிக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. தமிழகத்தில் ஏற்கனவே மூன்றரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு பதிலாக அந்த பணியிடங்களை ஒழித்து விடலாமா? என்பது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க 3 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்து 18.08.2022 தேதி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இந்த பணியிடங்கள் இனி நிரப்பப்படுவதற்கு வாய்ப்பில்லை. மீதமுள்ள பணியிடங்களும் தற்காலிகமாகவும், ஒப்பந்த அடிப்படையிலும் தான் இட ஒதுக்கீட்டை கடைபிடிக்காமல் நிரப்பப்படும் என்றால், அதை விட மோசமான சமூக அநீதி இருக்க முடியாது.

இதை தமிழக அரசு அனுமதிக்கவும் கூடாது. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளிலும், கல்வி நிறுவனங்களிலும் காலியாக உள்ள மூன்றரை லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்; புதிதாக 2 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதற்கு முற்றிலும் எதிராக பணியிடங்களை ரத்து செய்ய முயல்வதும், நிரந்தர பணியாளர்களுக்கு பதில் தற்காலிக பணியாளர்களை நியமிக்கத் துடிப்பதும் அரசுக்கு எந்த வகையிலும் நற்பெயரை பெற்றுக் கொடுக்காது. இதை உணர்ந்து கொண்டு சமூகநீதிக்கு எதிரான மனிதவள சீர்திருத்தக் குழுவை அமைப்பதற்காக மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அரசாணை எண் 115-ஐ தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று வலியுறுத்தி உள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது பதிவில், தமிழக அரசுப் பணிகளில் உள்ள லட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துடன் தி.மு.க அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அரசு வேலைக்காக முயற்சித்துவரும் இளைஞர்களின் கனவில் மண் அள்ளிப்போடும் விதமாக தி.மு.க அரசு செயல்படுவதை ஏற்க முடியாது. அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது மட்டுமின்றி, பணியிலுள்ள அரசு அலுவலர்களின் செயல்பாடுகளை மதிப்பிடுவதையும் தனியார்மயமாக்க தி.மு.க அரசு, திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

அரசு எந்திரத்தின் மூளையாக செயல்படும் அரசு ஊழியர்களை புதிதாக நியமிப்பதையும் ஏற்கனவே இருப்பவர்களை கட்டுப்படுத்துவதையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டால், ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் தனியார் வசம் போய்விடாதா? என்றும் சற்றேறக்குறைய இது தமிழ்நாட்டையே தனியாருக்கு விற்பதற்குச் சமமாகும். புரட்சித்தலைவரால் தீய சக்தி என அடையாளம் காட்டப்பட்ட தி.மு.க.வின் போலி திராவிட மாடல் அதைத்தான் செய்ய விரும்புகிறதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலை கனவைக் குழி தோண்டி புதைக்கும் தி.மு.க அரசின் அரசாணை எண் 115-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அரசு ஊழியர்கள், இளைஞர் சக்தி மற்றும் பொதுமக்களோடு இணைந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன் என கூறியுள்ளார்.