மார்பக புற்றுநோய்க்கு பரிசோதனை முறையில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி மனிதர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் நல்ல பலனை அளித்துள்ளது.

இது குறித்து புற்றுநோய் தொடர்பான மருத்துவ இதழான JAMA ஆன்காலஜி இதழில் வெளியான கட்டுரையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனையில் முதல் கட்டமாக மனித சோதனை முடிவுகள் குறிப்பிடத்தகுந்த வெற்றியை தந்துள்ளது.

இந்த மார்பக புற்றுநோய் பரிசோதனை தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்று சோதனை முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி தற்போது செயல்திறனுக்கான இரண்டாம் கட்ட சோதனையில் உள்ளது.

30% மார்பக புற்றுநோய்கள் மனித மேல்தோல் வளர்ச்சி காரணி ஏற்பி 2 (HER2) எனப்படும் அதிகப்படியான புரத உற்பத்தியை உள்ளடக்கியது.

இந்த HER2-பாசிட்டிவ் புற்றுநோய்கள் மற்ற வகை மார்பகப் புற்றுநோயைக் காட்டிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது மட்டுமன்றி வேகமாக வளரவும் மீண்டும் மீண்டும் தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

இவ்வகை HER2-பாசிட்டிவ் டியூமர் கட்டிகளை எதிர்த்து செயலாற்றும் வகையில் நோயெதிர்ப்பு மண்டலத்தை தயார்படுத்தும் தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த பரிசோதனை தடுப்பூசி புற்றுநோய் தோன்றுவதைத் தடுக்க அனைவருக்குமான தடுப்பூசியாக இல்லாமல் புற்றுநோய் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு இவ்வகையான டியூமர் கட்டிகளை தேடி அழிக்கவும் நோயெதிர்ப்பு மண்டலங்களை உருவாக்கவும் உறுதுணையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

முதல் கட்ட சோதனைக்கு பிறகு இரண்டாம் கட்ட செயல்திறன் சோதனையில் நம்பிக்கை தரும் முன்னேற்றம் இருந்தால் மூன்றாம் கட்ட சோதனைக்கு அனுமதிக்கப்படும். தற்போதைய சோதனையின் முடிவுகள் முழுமையாக தெரிய மேலும் இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முதல் கட்ட முயற்சியிலேயே இருந்த இந்த தடுப்பூசி மனிதர்களிடம் நடத்திய சோதனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்தது மருத்துவ ஆராய்ச்சியாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.