சேலம்: சேலம் மாநகராட்சி செய்து வரும் ஆள்குறைப்பு நடவடிக்கையை கண்டித்து மாநகராட்சி ஊழியர்கள் அலுவலகம் முன்பு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி திமுக வசம் உள்ளது. அங்கு அரசு ஆணை 152 கீழ் மறுசீராய்வு செய்யும் வகையில் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைத்து தனியார் ஒப்பந்த பணியாளர்களை நியமனம் செய்து வருகிறது. இது அங்கு ஏற்கனவே பணியாற்றி வரும் பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பலரை தேவயைற்ற புகார் காரணமாக மாநகராட்சி அதிகாரிகள் பணி நீக்கம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து, சேலம் மாநகராட்சி அனைத்து பிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. இந்த தர்ணா போராட்டத்தில், மாநகராட்சியின் அனைத்து நிலைகளிலும் பணிபுரியும் தினக்கூலி மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் நேற்று தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் பேசிய போராட்டக்குழு தலைவர், தமிழக அரசு அரசு ஊழியர்களின் காவலனாக இருக்கும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்தற்கு மாறாக செயல்பட்டு வருகிறது. மாநகராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அரசின் அனைத்து பணிகளையும் தனியாருக்கு தாரை வார்க்க சேலம் மாநகராட்சி முன்வந்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றதுடன், சேலம் மாநகராட்சியின் நடவடிக்கை காரணமாக, 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஊழியர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழக அரசு அறிவித்த 152 அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.500க்கும் மேற்பட்ட மாநகராட்சி அடிப்படை பணியாளர்கள் ஒன்று திரண்டு மாநகராட்சி வளாகத்தில் தமிழக அரசு எதிராக கண்டன கோசங்கள் எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.