டெல்லி: யுஜிசி நெட் தேர்வர்களுக்கான விடைத்தாள்கள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணி, இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship-JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் நடத்தப்படுகிறது. மொத்தம் 84 பாடங்களுக்கு நடைபெறும் இந்த தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களே அதற்கான பலனை பெற முடியும்.
அதன்படி, நடபாண்டு யுஜிசி நெட் தேர்வு ஜூலை 9 முதல் ஜூலை 12 வரை மற்றும் செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 23ஆம் தேதி வரை மற்றும், மூன்றாவது கட்டம் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரை நடைபெற்றது. இறுதிக்கட்டத் தேர்வு அக்டோபர் 8ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 14ஆம் தேதி வரை என 4 கட்டங்களாக நடத்தப்பட்டது.
இந்த தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, யுஜிசி நெட் (UGC NET 2022) முடிவுகள் நாளை (5ந்தேதி) வெளியிடப் படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. என்டிஏவின் இணையதளங்களான ugcnet.nta.nic.in மற்றும் ntaresults.nic.in என்ற இணையதள பக்கங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.