பிரேசில் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் பொல்சனாரோவுக்கும் முன்னாள் அதிபர் லூலா டா சில்வாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.
முதல் சுற்றில் லூலாவுக்கு 48.4 சதவீத வாக்குகளும், பொல்சனாரோவுக்கு 43.3 சதவீத வாக்குகளும் கிடைத்தது.
பிரேசில் தேர்தல் விதிகளின்படி 50 சதவீதத்திற்கும் கூடுதலாக வாக்குகள் பெற்றவரே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார் என்பதால் அடுத்த சுற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் முன்னாள் அதிபரும் தொழிற்சங்கவாதியுமான 76 வயது லூலா-வுக்கு 50.83 சதவீத வாக்குகள் கிடைத்தது, பொல்சனாரோவுக்கு 49.17 சதவீத வாக்குகள் கிடைத்தது.
அமேசான் மழைக்காடுகள் அழிப்பு, கொரோனா சர்ச்சை ஆகியவற்றால் பொல்சனாரோவுக்கு சமீப காலமாக செல்வாக்கு குறைந்து வந்தது.
அதேவேளையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட லூலா ஊழல் புகாரில் சிறை சென்று திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் பதவிக்கான போட்டியில் இந்த இருவர் தவிர மேலும் 9 பேர் போட்டியில் இருந்த நிலையில் அதிபராக லூலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2002 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட லூலா 2003 முதல் 2010 வரை எட்டு ஆண்டுகள் பதவியில் இருந்தார்.
பிரேசிலின் வறுமை ஒழிப்புக்கு பெரும்பங்காற்றியவர் என்று புகழப்படும் லூலா தற்போது மூன்றாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2023 ஜனவரி மாதம் பதவி ஏற்க உள்ளார்.