அகமதாபாத்: குஜராத் மாநிலம் மோர்பியில் நேற்று கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 132 பேர் உயிரிழந்த நிலையில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆங்கிலேயர் காலத்துக்கு முன்னதாகவே கட்டப்பட்ட மோர்பி தொங்கு பாலம் 100 ஆண்டுகளை கடந்த நிலையில், அவ்வப்போது பழுது பார்க்கப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வந்தது. அதுபோல, ரூ.2 கோடி செலவில் 7 மாதங்கள் பழுது பார்த்தபிறகு கடந்த வாரம் தீபாவளி தினத்தன்று மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.  ஒரே நேரத்தில் 500 பேர் பாலத்தில் நின்றபோது பாரம் தாங்காமல் பாலம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த பாலமானது,  குஜராத்தின் அகமதாபாத் நகரில் இருந்து சுமார் 300 கி.மீ., தூரத்தில் உள்ள மோர்பி பகுதியில் அமைந்துள்ளது. இந்த தொங்கு பாலம், நேற்று 6.42 மணியளவில் மொத்தமாக இடிந்து விபத்துக்குள்ளானது. பாலம் இடிந்து விழுந்ததில், இதுவரை 132 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 177 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்கள் இடிப்பாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், ராணுவம், கப்பல் படை, விமானப்படை ஆகியவை மீட்புப் பணியில் களமிறங்கின. படகுகளை கொண்டு மீட்புப் பணி நடைபெற்ற நிலையில், படுகாயத்துடன் 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

132 பேரை பலி வாங்கிய குஜராத் மோர்பி பாலம் எப்போது, யாரால் கட்டப்பட்டது தெரியுமா?