டெல்லி: இந்திய கிரிக்கெட்டில் ஆடவர் அணிக்கு சமமான ஊதியம் பெண்கள் அணிக்கும் வழங்கப்படும் என பிபிசிஐ தலைவர் ஜெய்ஷா தெரிவித்து உள்ளர்.  பாலின பாகுபாட்டை களையும் முதல் நடவடிக்கையாக ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பிசிசிஐ தலைவர் அறிவித்தார்.  அதன்படி,  இந்திய கிரிக்கெட்டில், ஆடவர் அணிகளுக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று  தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், “பாகுபாட்டைச் சமாளிப்பதற்கான பிசிசிஐயின் முதல் படியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ள பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதிய சமபங்கு கொள்கையை செயல்படுத்தி வருகிறோம். இந்திய கிரிக்கெட்டில் பாலின சமத்துவத்தின் புதிய சகாப்தத்திற்கு நாம் செல்லும்போது ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கான போட்டி கட்டணம் ஒரே மாதிரியாக இருக்கும்” என்று தெரிவித்து உள்ளார்.

ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்திய மகளிர் கிரிக்கெட் வீரர்கள் இப்போது போட்டிக் கட்டணமாக ஒரு டெஸ்டுக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும், டி20க்கு ரூ.3 லட்சமும் சம்பாதிப்பார்கள்.

“பிசிசிஐ மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு அவர்களது ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் போட்டிக் கட்டணமே வழங்கப்படும். டெஸ்ட் (INR 15 லட்சம்), ODI (INR 6 லட்சம்), T20I (INR 3 லட்சம்). சமபங்கு ஊதியம் என்பது நமது மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு எனது அர்ப்பணிப்பு மற்றும் அவர்களின் ஆதரவிற்கு நான் அபெக்ஸ் கவுன்சிலுக்கு நன்றி கூறுகிறேன். ஜெய் ஹிந்த்,” என்று பதிவிட்டுள்ளார்.

பிசிசிஐ-ன் இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு கிட்டியுள்ளது.  இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள முன்னாள் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் , “இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டில் இது ஒரு வரலாற்று முடிவு! அடுத்த ஆண்டு WIPL உடன் ஊதிய சமபங்கு கொள்கை, இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டுக்கான புதிய சகாப்தத்தை நாங்கள் தொடங்குகிறோம். இதைச் செய்ததற்காக ஜெய் ஷா சார் மற்றும் பிசிசிஐக்கு நன்றி. இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.