சென்னை; பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை வரும் 30ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள தேவர் சமாதியில் மரியாதை செலுத்த செல்வதை முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தவிர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை வரும் 30ந்தேதி அவர் பிறந்த ஊரான, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அவரது சமாதியில் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டு முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா. இதையொட்டி, அங்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னல் உள்ள தேவர் சமாதிக்கு, தமிழகஅரசு சார்பில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சமூக தலைவர்கள் மரியாதை செய்வது வழக்கமான நடைமுறை. இந்த ஆண்டு அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, ஓபிஎஸ் சமுதாயமான முக்குலத்தோர் அதிகமாக வசிக்கும் பகுதி என்பதால், அங்கு செல்வதை எடப்பாடி பழனிச்சாமி தவிர்க்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு, அதிமுக சார்பில் தங்கக்கவசம் அணிவிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு, ஓபிஎஸ், இபிஎஸ் மோதல் காரணமாக, அதை பெறுவதில் சட்டச்சிக்கல் எழுந்துள்ளது. இதனால் தங்கக்கவசம் அணிவிக்கப்படுமா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது. இது, தேவர் சமுதாயமான முக்குலத்தோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தியில் எடப்பாடி கலந்துகொள்ள மாட்டார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து உள்ளனர். அவர் சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வார் என்று கூறப்படுகிறது.