டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி ஏற்றார். 24ஆண்டுகளுக்கு காந்தி, நேரு குடும்பத்தை அல்லாத ஒருவர் முதன்முறையாக கட்சி தலைவர் பொறுப்பேற்றுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இந்த பதவி ஏற்பு விழா நடைபெற்றது. கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் எம்பி ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் கட்சித் தலைவர்கள் முன்னிலையில், அவர் கட்சி தலைவராக பதவி ஏற்றார்,.
முன்னதாக கார்கே ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தக்கு வருகை தந்தார். அங்கு முன்னாள் தலைவர் சோனியா காந்தி, எம்பி ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா உள்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அவரைவரவேற்றனர்.
அதைத்தொடர்த்நது, காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி, தேர்தல் சான்றிதழை கார்கேவிடம் முறைப்படி ஒப்படைத்தார். அதன் பின்னர், கட்சி தலைவர் பதவி உள்பட பொறுப்புகளை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி கார்கேவிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அவர் தலைவராக பொறுப்பேற்றுக்கண்டார். அவருக்கு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தைச் சார்ந்தவர்களே இதுவரைக்கும் பதவியில் இருந்து வந்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததால் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொண்ட ராகுல்காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகினார். இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் எழுந்த பல்வேறு சர்ச்சைகளைத் தொடர்ந்து, கட்சி தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் கார்கேவும் சசிதரூம் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். அதைத்தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி (அக்டோபர்) அன்று நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகங்களில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 19ஆம் தேதி எண்ணப்பட்டன. அதில் 7,897 வாக்குகள் பெற்று மல்லிகார் ஜுன கார்கே அபார வெற்றி பெற்று விட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசிதரூர் வெறும் ஆயிரம் வாக்குகள் மட்டும் பெற்றிருந்தார். 24 ஆண்டுகளுக்கு பின்னர் நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வெற்றிபெற்றுள்ளது பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அவர் இன்று டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் பதவி ஏற்றார்.