கணினிப் பூக்கள்
கவிதைத் தொகுப்பு – பகுதி 27
பா. தேவிமயில் குமார்
இட்லித் திருநாள்
♦ “காசு கரியாகுதே”
சொலவடை
நடைமுறையாகிறது
♦ மோதிரமும் மைனர் செயினும்,
மரபான…..
தலை தீபாவளி
♦ பட்டாசு வெடிக்கும்
பையனை
பழைய நினைவுகளோடு
பார்க்கிறான் தந்தை
♦ சாலையோர வியாபாரிக்கும்
உண்டு தீபாவளி
அவனிடமும்
ஏதாவது வாங்குங்கள்!
♦ அதிரசமும் முறுக்கும்
அறிவிக்கப்படாத
புவி (தீபாவளி) சார் குறியீட்டு பலகாரங்கள்
♦ அமாவாசை நாளில்
அசைவம்….
அடுக்களையில்
♦ நடை முறையானது
நரகாசுரனை மறந்த
தீபாவளி கொண்டாட்டங்கள்
♦ உரிமம் பெறாத
துப்பாக்கி ,
வெடிக்கிறது!
வீடு தோறும்,
♦ கம்பி மத்தாப்பை
“கண்டு”(மட்டும்)களிக்கவே
காத்திருக்கின்ற
கந்தலாடை குழந்தைகள்
♦ இருப்பவர்க்கு
இனிப்புத் திருநாள்
இல்லாதோர்க்கு
இட்லித் திருநாள்