சென்னை: விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு புதிய அபராத நடைமுறை 28-ந்தேதிக்கு மேல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ள சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் சென்னையில் போக்குவரத்து மாற்றங்களை விவரிக்கும் சாலை வரைபட செயலியை அறிமுகம் செய்து வைத்தார்
சென்னையில் விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு புதிய அபராத கட்டணங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், சென்னையில் போக்குவரத்து மாற்றங்களை விவரிக்கும் சாலை வரைபட செயலி ஒன்றை போக்குவரத்து போலீசார் அறிமுகம் செய்துள்ளனர். இந்த செயலியை முறைப்படி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
மாநில தலைநகர் சென்னை கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. பல இடங்கள் ஒன்வே பாதையாக மாற்றப்பட்டு உள்ளன. இதனால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்பட்ட உள்ளனர். இந்த நிலையில், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எளிதில் போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பான விவரம் தெரிந்துகொள்ளும் வகையில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுவரை, செய்தி குறிப்பு வாயிலாக பத்திரிகைகள் மற்றும் இதர சமூக ஊடகங்களுக்கு கமிஷனர் அலுவலகம் மூலம் அறிவிக்கப்பட்டு, அது பொதுமக்களின் கவனத்தில் எடுத்துச்செல்லப்படுகிறது. ஆனால் திடீர் போராட்டம், விபத்து போன்றவை ஏற்படும் போது திடீரென்று போக்குவரத்து மாற்றம் செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனை செய்திக்குறிப்பு வாயிலாக அறிவிக்க முடியாது. பொதுவாக போக்குவரத்து மாற்றங்கள் பற்றிய சாலை வரைப்படங்களை (மேப்) கூகுளில் வெளியிடும்போது, அது வழியாக வெளியாக குறைந்தது ஒரு நாள் ஆகும். ஆனால் தற்போது 15 நிமிடங்களில் இதுபற்றி வரைப்பட விவரங்கள் வெளியாக புதிய செயலி ஒன்று தனியார் நிறுவன உதவியோடு வடிவமைக்கப்பட்டது. அந்த செயலி கடந்த 4 நாட்களாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. அது வெற்றிகரமாக செயல்பட்டதால் அந்த செயலியை அறிமுகப்படுத்தும் விழா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் விழாவில் கலந்துகொண்டு இந்த செயலியை முறைப்படி தொடங்கி வைத்தார். தற்போது இந்த செயலியின் செயல்பாடு சென்னையில் உள்ள சில சாலைகளில் மட்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. அடுத்தகட்டமாக இந்த செயலியின் பயன்பாடு சென்னையில் உள்ள அனைத்து சாலைகளிலும் பயன்பாட்டுக்கு வரும்.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி ஷரத்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சென்னையில் போக்குவரத்து வார்டன் பிரிவில் புதிதாக பயிற்சி பெற்ற 21 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். அவர்கள் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதையடுத்து செய்தியளார்களை சந்தித்த ஆணையர் ஜிவால், விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு புதிய அபராத நடைமுறை வருகிற 28-ந்தேதிக்கு மேல் நடைமுறைக்கு வரும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
சென்னை போக்குவரத்து மாற்றங்களை விவரிக்கும் சாலை வரைபட செயலி (road Ease) நல்ல பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். அந்த செயலி மூலம் வாகன ஓட்டிகள் எந்தெந்த இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். அந்த செயலி வரைப்படத்தில் வாகனங்களில் செல்ல முடியாது என்பது சிவப்பு கோடிட்டு காட்டப்பட்டிருக்கும். மாற்று பாதையில் வாகனங்கள் எவ்வாறு செல்ல வேண்டும் என்பதையும் அதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தற்போது சென்னையில் 129 இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளும், 22 இடங்களில் மெட்ரோ ரெயில் பணியும் நடக்கிறது. இந்த இடங்களில் செய்யப்படும் போக்குவரத்து மாற்றங்கள் இந்த செயலி மூலம் உடனுக்குடன் அறிவிக்கப்படுகிறது
. இந்த சாலை வரைப்பட செயலி ஓராண்டுக்கு அமலில் இருக்கும். விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு புதிய அபராத நடைமுறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வருகிற 28-ந்தேதி இ-சலான்களில் பதிவேற்றம் செய்யப்படும். அதன்பின்னர் அடுத்த ஒரு வாரத்துக்குள் இந்த அபராத நடவடிக்கை அமலுக்கு வரும்.
போதையில் வாகனம் ஓட்டி சென்று விபத்தை உண்டாக்கியதில் கடந்த வாரம் ஒரு தாயும், குழந்தையும் இறந்து போனார்கள். அந்த வாகனத்தை ஓட்டி சென்றவருக்கு பின்னால் ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தார். அந்த பெண் மீதும், வாகனத்தை ஓட்டியவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை ஓட்டியவர் மீது சாவுக்கு காரணமாக இருந்ததாக 304 (2) சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளிடம் போலீசார் பண வசூலில் ஈடுபடும் குற்றங்கள் தற்போது பெரியளவில் நடைபெறவில்லை. சமீபத்தில் 2 பேர் மீது மட்டுமே புகார் வந்தது. அவர்கள் 2 பேரும் போக்குவரத்து போலீஸ் பிரிவில் இருந்து மாற்றப்பட்டனர். அவர்கள் மீது துறைரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது போன்ற பண வசூலில் ஈடுபடும் போலீசார் மீது சமூக வலைத்தளங்கள் மூலம் புகார் தெரிவிக்கும் பல்வேறு நடைமுறைகள் தற்போது அமலில் உள்ளது. பொதுமக்கள் அதன் வாயிலாக புகார் கொடுத்தால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.