தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடந்து நாசர் தலைமையில் புது நிர்வாகிகள் சமீபத்தில் பதவி ஏற்றனர். முந்தைய நிர்வாகிகளான சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் சங்கத்து கணக்கு வழக்குகளை சரியாக ஒப்படைக்கவில்லை என்று புகார் எழுந்தது. நடிகர் சங்கத்தில் புதிய கட்டிடம் கட்ட முந்தைய நிர்வாகிகள் செய்த ஏற்பாடுகள் குறித்தும் புகார்கள் எழுந்தன.
புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றபிறகு, கட்டிடம் கட்டும் ஒப்பந்தம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கணக்குவழக்குகளை சரத்குமார் ஒப்படைக்கவில்லை என்று, பூச்சி முருகன் காவல்துறையில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து இன்று, சென்னை காவல்துறை ஆணையரிடம் ஒரு புகாரை சரத்குமார் கொடுத்தார். அதில், “நான் நடிகர் சங்க செயலாளராக ஆறு ஆண்டுகளும், தலைவராக ஒன்பது ஆண்டுகளும் பதவி வகித்தேன். தற்போது உள்ள புதிய நிர்வாகிகள் கேட்ட வரவு செலவு கணக்குகளை முறையாக சமர்ப்பித்துவிட்டேன். ஆனால், தற்போதைய நிர்வாகிகளில் ஒருவரான பூச்சி முருகன், வேண்டுமென்றே என் மீது காவல்துறையில் ஊழல் புகார் கொடுத்திருக்கிறார்.
என் பெயருக்கும், புகழுக்கும், கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இவர் செயல்படுகிறார். என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படும் வகையில் செயல்படுவதை தடுத்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” – இவ்வாறு சரத்குமார் தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார்.