சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை என்றும், தமிழ் கட்டாயப் பாடம் கிடையாது என்பதும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டைய தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் செயல்படும் மத்தியஅரசின் கேந்திரியி வித்யாலயா பள்ளி உள்பட பல்வேறு சிபிஎஸ்இ பள்ளிகளிலும் தமிழ்ப்பாடம் இடம்பெறுவது இல்லை. அதே வேளையில் இந்தி பாடம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இயங்கி வரும் 49 கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளது. ஆனால், தமிழ்பாடம் கட்டாயமாக்கப்படவில்லை.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழிப் பாடங்கள் கட்டாய பாடங்களாகவும், 9ஆம் வகுப்பு முதல் அவை விருப்பப் பாடங்களாக உள்ளன. ஆனால், அங்கு தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை. 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி பாடம், கட்டாயப் பாடமாக இடம்பெறவில்லை. அதுபோல, சமஸ்கிருத மொழிக்குப் பதிலாக தமிழை மொழிப் பாடமாக பயில முடியாது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் 109 இந்தி கற்பிக்கும் ஆசிரியர்களும், 53 சமஸ்கிருதம் கற்பிக்கும் ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஒருவர் கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாக உள்ளன.