டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தலில், மூத்த தலைவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து வாக்களிக்க முடியாது என தேர்தல் பிரிவு செயலாளர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்து உள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தல் வரும் 17-ந்தேதி நடக்கிறது. தேர்லில் சசிதரூர், கார்கே ஆகிய இருவர் மட்டுமே போட்டியிடுகின்றனர். இதில் கார்கே வெற்றிபெறும் சூழல் உள்ளது. தேர்தல் தொடர்பாக இருவரும் மாநிலங்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
இதற்கிடையில் தேர்தலுக்கு தேவையான வாக்குச்சீட்டுக்கள், வாக்குபெட்டிகள் மாநிலங்களுக்க அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த தேர்தல் வாக்குப்பதிவு, டெல்லியில் உள்ள கட்சியின் தேசிய தலைமை அலுவலகம் மற்று சென்னை உள்பட அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைநகரங்களில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு அக்டோபர் 17-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து 19-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த நிலையில், தேர்தல் பிரிவு செயலாளர் மதுசூதன் மிஸ்திரி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், செயலாளர்கள், இணைச்செயலாளர்கள் தங்கள் வாக்கினை சொந்த மாநிலங்களில் அல்லது டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்தான் (இரண்டில் ஒன்றை அவர்கள் விருப்பபப்படி தேர்வு செய்து) செலுத்த வேண்டும். அத்துடன், அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஓட்டு போடக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளது. தேர்தல் பாரபட்சமின்றி நடைபெறும் வகையில், தேர்தல் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைப் பேணவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு முடிந்ததும், வாக்குப்பெட்டிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன.