சென்னை: பள்ளிகளில் கூட்டம் நடத்த எந்தவொரு அமைப்பினருக்கும் அனுமதி இல்லை என்றவர், அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி யுகேஜி குழந்தைகளின் படிப்புக்காக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் தொகுப் பூதியத்தை உயர்த்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
கொரோனா காலத்தில் பள்ளிக்குழந்தைகள் வீட்டிலேயே இருந்து விட்டதால், அவர்களின் வாசிப்பு திறன், கற்றல் திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது என அதனை தீர்க்க எண்ணும் எழுத்தும் என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன் மூலம் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரும்பு, மொட்டு, மலர் என அவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் மட்டும் எழுத, வாசிக்க பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் அவர்கள் கற்றல் திறன் மேம்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே தெரிவித்தது.
அதன்படி, இன்று ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கும் சிறப்பு முகாம் சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அத்தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழ்நாட்டில் உள்ள CBSE, ICSE பள்ளிகளையும் ஆய்வு செய்ய இருப்பதாக கூறியவர்,
பள்ளி களில் Right, Left உள்ளிட்ட எந்த இரு கருத்தியலும் நுழையக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. எந்தவொரு அரசியல் அமைப்பினரும் பள்ளி வளாகங்களில் கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்றவர், கோவையில் நடைபெற்ற சம்பவம் குறித்து முதன்மை கல்வி அலுவலரிடம் அறிக்கை கேட்கப்பட்டு இருப்பதாகவும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்றார்.
Montessori பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பதில் தன்னார்வலர்களை தேர்வு செய்வது ஏன்? என்ற கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர், இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்களின் செயல்பாடுகள் பிரமிப்பை ஏற்படுத்துவதால், அவர்களே LKG, UKG வகுப்புகளுக்கு பொருத்தமானவர்களாக இருப்பார்கள் என்றார்.
LKG, UKG வகுப்புகளுக்கு நியமிக்கப்பட உள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்துவது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்றார்.
மேலும், பள்ளிகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், மின்சாதனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக கூறியவர், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.