சென்னை; தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் 30 நோடல் அதிகாரிகளை நியமனம் செய்து  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அதிகாரிகள் ஆய்வு செய்துஅறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றது முதல் ஏராளமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், பல திட்டங்கள் முறையாக பயனர்களை சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பல திட்டங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அடிக்கடி சர்ச்சைகளும் எழுகின்றன. இது தமிழக அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில்,   தமிழக அரசின் நலத் திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா, அதில் நடைமுறை சிக்கல்கள் ஏதாவது உள்ளதா என்பதைக் கண்காணிக்க 30 அதிகாரிகளைத் தமிழக அரசு நியமித்துள்ளது.  இந்த அதிகாரிகள் மாதத்தில் நான்கு நாட்கள் திட்டங்கள் தொடர் பாக  நேரில் சென்று ஆய்வு நடத்தவும், நலத்திட்டங்களைக் கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.