சண்டிகர்:
ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. அக்டோபர் 17ம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்க உள்ளது. அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். இசெப்டம்பர் 30 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற இருக்கிறது.

இந்த தேர்தலில் போட்டியிட திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசி தரூர் முடிவுசெய்துள்ளார். அவர் ஜி 23 குழுவை சேர்ந்த தலைவர். கட்சியில் சோனியா, ராகுல் காந்தியின் ஆதிக்கத்திற்கு எதிராக பேசி வந்தார். இந்த நிலையில்தான் தலைவர் தேர்தலிலும் போட்டியிடுகிறார். இன்னொரு பக்கம் 71 வயது நிரம்பிய மூத்த தலைவரான அசோக் கெலாட், சோனியா ஆதரவுடன் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் நேரு குடும்பத்திற்கு நெருக்கமான தலைவர். அசோக் கெலாட் நீண்ட கால, பாரம்பரிய காங்கிரஸ் உறுப்பினர். இந்திரா காந்தி காலத்து காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட். கட்சியின் தீவிர விசுவாசி, மூத்த தலைவர். அசோக் கெலாட் தலைவராகும் பட்சத்தில் சச்சின் பைலட் ராஜஸ்தான் முதல்வர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் ஒரு தலைவருக்கு ஒரு பதவி என்ற விதி உள்ளது. இதை ராகுல் காந்தியும் நேற்று குறிப்பிட்டு பேசி இருந்தார். இதனால் கண்டிப்பாக அசோக் கெலாட் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வார்.

ராஜஸ்தான் காங்கிரசில் தேர்தலுக்கு பின்பில் இருந்தே முதல்வர் பதவிக்கான போட்டி உள்ளது. அசோக் கெலாட் முதல்வர் பதவியை பெற்ற நிலையில் சச்சின் பைலட் முதல்வர் பதவிக்கு அடிபோட்டார். இடையில் அவர் தனது ஆதரவாளர்களுடன் ரிசார்ட்டில் தங்கி இருந்ததும். பிரியங்கா, ராகுல் ஆகியோர் சச்சின் பைலட்டை சமாதானம் செய்ததும் நடந்தது. இந்த நிலையில்தான் ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

ராஜஸ்தானில் சச்சின் பைலட்டை முதல்வராக்குவது தொடர்பாக இன்று ஆலோசனை செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இன்று நடக்கும் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது. ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் மல்லிகார்ஜுன கார்கே, அஜய் மக்கான் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். முதலில் அசோக் கெலாட்டிற்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மனமில்லை என்று கூறப்பட்டது. ஆனால் ஒரு தலைவர் ஒரு பதவி விதி பற்றி ராகுல் காந்தி உறுதியாக சொன்னதால் அசோக் கெலாட் மனம் மாறியதாக கூறப்படுகிறது.