சென்னையை அடுத்த ஓரகடத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள வடக்குப்பட்டு என்ற ஊரில் இருந்து 12000 ஆண்டுகளுக்கு முந்தைய இடை கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளை இந்திய தொல்லியல் துறை கண்டெடுத்துள்ளது.
ஆய்வின் போது ஒரே குழியில் அடுக்கடுக்காக வெவ்வேறு நாகரிகத்தைச் சேர்ந்த வெவ்வேறு காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கலைப்பொருட்களைக் கண்டறிந்துள்ளது.
வடக்குப்பட்டு கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிக முக்கியமானவை, இடை கற்காலத்தைச் சேர்ந்த கல்லாலான கைக் கோடாரிகள், மண் வெட்டிகள், வெட்டுக்கத்திகள் மற்றும் உரல்கள்.
தரையின் மேற்பரப்பில் இருந்து வெறும் 75 செ.மீ. ஆழத்தில் இருந்தே இதுபோன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது கற்கருவிகளை செய்யக்கூடிய இடமாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் பழங்கால மக்கள் வேட்டையாடுவதற்கும், பொருட்களை சேகரிப்பதற்கும் பயன்படும் கற்கால கருவிகளை உருவாக்கிய இடம் போல் உள்ளது என சென்னை வட்ட, இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் எம்.காளிமுத்து தெரிவித்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
10mx10m குழியின் மேல் அடுக்கில், சங்க காலத்தின் (2,000 ஆண்டுகளுக்கும் மேலாக) கலைப்பொருட்கள் மற்றும் ரோமானிய மண்பாண்டங்கள் மற்றும் கண்ணாடி மணிகள் ஆகியவற்றைக் கண்டு தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் வியந்துபோயுள்ளனர்.
கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் 9 ம் நூற்றாண்டு வரை ஆண்ட பல்லவர் கால சிற்பங்கள் தவிர தங்க ஆபரணங்கள், டெரகோட்டா பொம்மைகள், மணிகள், வளையல் துண்டுகள், பானை ஓடுகள் மற்றும் நாணயங்கள் ஆகியவற்றையும் கண்டுபிடித்துள்ளனர்.
வடக்குப்பட்டில் பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர் வாழ்வு உள்ளது. புதிய சான்றுகள் இது கலாச்சார ரீதியாகவும் தொல்லியல் ரீதியாகவும் முக்கியமான தளம் என்பதைக் காட்டுகிறது என்று ஓய்வு பெற்ற தொல்லியல் ஆய்வாளர் கே.ஸ்ரீதரன் கூறியுள்ளார்.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தொல்லியல் தலங்களைத் தவிர, தமிழ்நாட்டின் வடக்குப்பட்டில் மட்டுமே இடைக் கற்காலக் கருவிகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுக்கடுக்காக வெவ்வேறு நாகரிகத்தைச் சேர்ந்த பல்வேறு நூற்றாண்டுகளை சேர்ந்த அரிய கலை பொருட்கள் ஒரே இடத்தில் கிடைத்திருப்பதன் மூலம் இங்கு ஏராளமான மக்கள் வாழ்ந்ததைக் குறிப்பதாக உள்ளது.