துருக்கி நாட்டின் இஸ்கென்டிரன் துறைமுகத்தில் கன்டெய்னர்களை ஏற்றிக்கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று பாரம் தாங்காமல் கடலில் மூழ்கியது.

செப்டம்பர் 17 ம் தேதி பின்னிரவு அல்லது 18 ம் தேதி அதிகாலை நடைபெற்ற இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை.

மத்தியதரைக்கடல் பகுதியில் துருக்கியின் தென் பகுதியில் உள்ள இந்த துறைமுகத்துக்கு 17 ம் தேதி மதியம் வந்த ‘சீ ஈகள்’ என்ற சரக்கு கப்பலில் கன்டெய்னர்களை ஏற்றும் பணி நடந்து வந்தது.

கப்பலில் கன்டெய்னர்கள் ஏற்றிக் கொண்டிருக்கும் போதே அந்த கப்பல் கடலில் சரிய துவங்கியதை அடுத்து அதிலிருந்த ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இருப்பினும், அதிலிருந்த சரக்குகள் அனைத்தும் நீரில் மூழ்கியது. நீரில் மூழ்கிய சரக்குகளின் நிலை மற்றும் சேதம் குறித்து இதுவரை தெரியவில்லை.

இந்த சரக்கு கப்பல் நிலை குலைந்து கடலில் மூழ்கும் காட்சிகள் அங்கிருந்த கேமரா-வில் பதிவானது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.