சென்னை: தமிழ்நாட்டில், ஆவின் நிறுவனத்தின் மேலும் சில பொருட்களின் விலை உயர்த்தி தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி ஆவின் மைசூர்பா, குலோப் ஜாமுன் உள்பட 17 பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான விலை பட்டியலும் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், பால் பொருட்கள் தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இரண்டு முறை சில வகை பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டது. அப்போது, கடந்த சில தினங்களுக்கு முன்பு பால், தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. மத்தியஅரசு 5 சதவிகிதம் வரி உயர்த்திய நிலையில், தமிழகஅரசு 20 சதவிகிம் விலையை உயர்த்தியது விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தற்போது, 3வது முறையாக மேலும் 17 இனிப்பு வகைகளின்  விலையை உயர்த்தி உள்ளது. அதன்படி, குறைந்த பட்சம்,  ரூ.20 முதல் ரூ.80 வரை இனிப்பு வகைகளின் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, குலாப் ஜாமுன் 125 கிராம் 5 ரூபாய் உயர்ந்து 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மைசூர்பா அரை கிலோ 230 ரூபாயில் இருந்து 270 ரூபாயாகவும், பால்கோவா 100 கிராம் 47 ரூபாயில் இருந்து 55 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.