சென்னை:
முகச்சிதைவுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஆவடி சிறுமி டானியா இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார்.

ஆவடி அருகே உள்ள வீராபுரத்தைச் சோ்ந்த 9வயது சிறுமி டானியா முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தாா். அவர் பள்ளியில் படிக்குபோது, அவரை பார்க்கும் சக சிறுவர்கள், சிறுமிகள் கிண்டல் செய்வதும், அவரிடம் இருந்து ஒதுங்கிச்செல்வதுமாக இருந்ததால், கடுமையான மனஅழுத்தத்துக்கு ஆளானார். இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினக்கு தனது பிஞ்சு குரலில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உதவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.

இது முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அதையடுத்து, உடனடியாக அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, கடந்த 17-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமையில், மருத்துவக் குழுவினா் டானியாவின் வீட்டுக்குச் சென்று இதுவரை வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தனா். பின்னா், சிறுமியை பூந்தமல்லி அருகே தண்டலத்தில் உள்ள சவீதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

தொடர்ந்து, பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தினமும் மருத்துவமனைக்குச் சென்று, சிறுமி டானியாவை சந்தித்து உடல் நலம் விசாரித்து, சிகிச்சை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். மேலும், அவா் சிறுமிக்கு முதலமைச்சா் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டாா்.

தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக சிறுமி டானியாவுக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. பல மருத்துவ நிபுணர்கள் வந்து, சிகிச்சை குறித்து ஆய்வு செய்தனர். இதையடுத்து, சிறுமிக்கு கடந்த 23-ந்தேதி வெற்றிகரமாக முக அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து, டானியாவுக்கு 10 மருத்துவ நிபுணர்கள் கொண்ட மருத்துவக் குழுவினா் சுமாா் 9 மணி நேர முக சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து, சிறுமி டானியா மருத்துவமனையில் சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில், அவா் முழுமையாக குணமடைந்ததை தொடர்ந்து இன்று டிஸ்சார்ஜ் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.