இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக 73 வயதாகும் மன்னர் சார்லஸ் III இன்று அதிகாரபூர்வமாக பதவியேற்க உள்ளார். பால்மோரல் அரண்மனையில் இருந்து தனது துணைவி ராணி கமீலாவுடன் பக்கிங்காம் அரண்மனைக்கு திரும்பிய மன்னர் சார்லஸ் III அங்கு குழுமியிருந்த மக்கள் முன் தோன்றினார்.
“வாழ்நாள் முழுவதும் நாட்டிற்காக சேவை செய்த மகாராணி எலிசபெத்-தின் வாக்குறுதியை நான் தொடருவேன்” என்று தனது இரங்கல் செய்தியில் கூறினார்.
இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்ற பின் நாட்டை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து தன் முதல் பேச்சை பதிவு செய்தார்.
“ஆழ்ந்த துக்க உணர்வுடன் இன்று உங்களுடன் பேசுகிறேன், என் அன்பிற்கினிய அன்னை, மாட்சிமை பொருந்திய மகாராணி, எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ஒரு உத்வேகமாகவும் முன்மாதிரியாகவும் திகழ்ந்தார்”
“எந்தவொரு குடும்பமும் தங்கள் தாயின் அன்பு, பாசம், வழிகாட்டுதல், புரிதல் மற்றும் முன்மாதிரி ஆகியவற்றிற்காக அவருக்கு செலுத்த வேண்டிய கடமையை எப்படி செய்யுமோ அதேபோல் நாங்களும் எங்கள் இதயப்பூர்வமான கடனை செலுத்த கடமைப்பட்டுள்ளோம்,”
“ராணி எலிசபெத் தனது வாழ்நாளை முழுமையாக வாழ்ந்து மறைந்துள்ளார்” என்று மூன்றாம் சார்லஸ் கூறினார்.
“70 ஆண்டுகளுக்கும் மேலாக, ராணியாக, என் அம்மா, பல நாடுகளின் மக்களுக்கு சேவை செய்தார் என்பதை மிகுந்த நன்றி உணர்வுடன் நினைவுகூற கடமைப்பட்டுள்ளேன், எனது குடும்பத்தினர் அனைவரும் அனுபவிக்கும் தனிப்பட்ட துயரத்தை, பிரிட்டன் மற்றும் ராணி அரச தலைவராக இருந்த காமன்வெல்த் மற்றும் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் உள்ள உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறோம்”என்று அவர் மேலும் கூறினார்.
ராணி பல தியாகங்களைச் செய்தார் என்றும் அவரது அர்ப்பணிப்பு “மாற்றம் மற்றும் முன்னேற்றத்திற்கான நேரங்களிலும், மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்ட காலங்களிலும், சோகம் மற்றும் இழப்பு நேரங்களிலும்” வலுவாக இருந்தது என்றும் புகழாரம் சூட்டினார்.
“Queen Elizabeth was a life well lived; a promise with destiny kept and she is mourned most deeply in her passing. That promise of lifelong service I renew to you all today.”
His Majesty The King addresses the Nation and the Commonwealth. pic.twitter.com/xQXVW5PPQ2
— The Royal Family (@RoyalFamily) September 9, 2022
“மக்கள் அவர் மீது வைத்த பாசம், பாராட்டு மற்றும் மரியாதை அவருடைய ஆட்சியின் அடையாளமாக மாறியது. இன்முகத்துடன் அரவணைத்து செல்லும் அவரது குணம் மக்களை சிறந்தவர்களாக வைத்திருக்க உதவியது என்பதற்கு எனது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் சாட்சி,” என்று அவர் கூறினார். .
“எங்கள் குடும்பம் மீதும் நாட்டில் உள்ள அனைத்து மக்கள் மீதும் நீங்கள் வைத்திருந்த அன்பு மற்றும் பக்திக்கு நன்றி. இத்தனை ஆண்டுகளாக விடாமுயற்சியுடன் சேவை செய்த என் அன்பான அம்மா, மறைந்த என் அப்பாவுடன் சேருவதற்கான பயணத்தை தொடங்கும் வேளையில் நன்றியுள்ளவனாக நான் இதை சொல்ல கடமைப்பட்டிருக்கிறன்…”
“தேவதை கூட்டம் உங்கள் இளைப்பாறலுக்காக பிரார்த்திக்கும்” – இவ்வாறு மன்னர் சார்லஸ் III தனது உரையில் உருக்கமாக பேசினார்.