சென்னை: ராகுலின் இற்றைய யாத்திரையில், நீட் தேர்வு தோல்வி காரணமாக தற்கொலை செய்துகொண்ட அரியலூர் அனிதா குடும்பத்தினர் பங்கேற்றனர். அப்பேது ராகுலிடம் நீட் விலக்கு கோரி மனு அளித்தனர்.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணம் இன்று 2வது நாளாக தொடர்ந்து வருகிறது. இன்று காலை 7மணி அளவில் அகஸ்தீஸ்வரத்தில் இருந்து தொடங்கினார். அவருடன் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் நடைபயணம் மேற்கொண்டனர்.
இந்த நடைபயணத்தின்போது, அந்த பகுதியில் உள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடம் இருந்து மனு வாங்கி வருகிறார் ராகுல் காந்தி. இந்த நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினர் ராகுல்காந்தியை சந்தித்தனர்.
அனிதாவின் தந்தையும், சகோதரரும் ராகுலுடன் இணைந்து நடைபயணம் மேற்கொண்டதுடன், அவரிடம் நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர். இது தொடர்பான புகைப்படம் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, சேலம் பொதுக்கூட்டத்தில், பங்கேற்ற ராகுல்காந்தி, நீட் தேர்விக்கு எதிராக பேசியிருந்தார். அப்போது,”தமிழ்நாட்டில், நீட் தேர்வின் காரணமாக அனிதா தற்கொலை செய்துகொண்டு இறந்தது, தமிழக மக்களின் உணர்வை வெளிப்படுத்தியது. அதனால் நீட் தேவையா… தேவையில்லையா என்பதை மாநில அரசு முடிவுசெய்ய வேண்டும். நீட் தேர்வால் அனிதாவைப் போல வேறு ஒரு மாணவி இறப்பதை காங்கிரஸ் விரும்பவில்லை” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.