சென்னை: தமிழகத்தில் இதுவரை 2கோடி பேர் மட்டுமே ஆதார் எண் வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநில தலைநகர் சென்னையில் குறைந்த அளவிலேயே பதிவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Sofar only 2 crore voters linked their Aadhaar number in tamilnaduநாடு முழுவதும் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும்படி நடைபெற்று வருகிறது. இந்த இணைப்பு ஆகஸ்டு 1ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இணையதளம் மூலம் மற்றும் அதற்கான பிரத்யேக செயலி மற்றும் அதற்கான பாரம் நிரம்பி கொடுத்து, இணைக்கும் வகையிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் சென்னை உள்பட மாவட்டங்களில் அதற்கான முகாம்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில் உள்ள 3750 வாக்குச் சாவடி மையங்களில் ஆதார் இணைப்பு சிறப்பு முகாம் நடந்தன.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குச்சாவடி மைய அதிகாரிகள் தலைமையில் நடந்த இந்த முகாம்களில் 45,854 பேர் தனது வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை சேர்க்க 6 டி படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர். கருடா இணையதளம் வழியாக 1571 பேர் இணைந்தனர். ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிக பட்சமாக 4336 பேரும், வேளச்சேரியில் 4221 பேரும் ஆதார் எண்களை இணைத்து உள்ளனர். சென்னையில் 60 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் மிக குறைந்த அளவிலேயே ஆதார் எண்களை இணைத்து உள்ளனர். பெரும்பாலானவர்கள் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்களை இணைக்க ஆர்வம் காட்ட வில்லை என்று கூறப்படுகிறது. மற்ற மாவட்டங்களில், கலெக்டர்கள், ஆதார் சிறப்பு இணைப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர். சில மாவட்டங்களில் 100 நாள் வேலை திட்ட பணிகள் நடைபெறும் இடங்களில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆதார் எண் இணைக்கும் நடவடிக்கையையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளர்களில் இதுவரை 2 கோடி பேர் அதாவது 32 சதவீத வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளனர்.