மதுரை: வைகை ஆற்றில் வினாடிக்கு 15ஆயிரம் க அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கேரளாவில் தொடர் கனமழை பெய்து வருவதால், முல்லை பெரியாறு அணைக்கு வரும் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்களின் நீராதாரமாக விளங்குகிறது. இங்கிருந்து திறக்கப்படும் தண்ணீரானது வைகை அணைக்கு வந்துகொண்டிருக்கிறது. இதனால் வைகை அணை நிரம்பி உள்ளது.
இதையடுத்து, வைகை அணையில் இருந்து விவசாய பணிக்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணைக்கு தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளதால், வைகை அணியில் தற்போது திறந்து விடப்படும் தண்ணீர், இன்று காலை 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை கரையோரம் உள்ள பொதுமக்கள் கூடுதல் கவனத்துடனும், பாதுகாப்பாகவும் இருந்திடவும், பொதுமக்கள் வைகை ஆற்றில் இறங்குவதை முற்றிலும் தவிர்த்திடவும், ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வைகை ஆற்றில் இறங்காமல் பாதுகாத்திடவும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.