நிதி மற்றும் நில மோசடி புகார் தொடர்பாக அசாம் முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா மீது சிபிஐ விசாரணை வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை வைத்துள்ளார்.

முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வ சர்மா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ள அசாம் மாநில காங்கிரஸ் கட்சி, இது தொடர்பாக சிபிஐ இயக்குனர் சுபோத் குமார் ஜெய்ஸ்வாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

கவுகாத்தியில் சமீபத்தில் இன்டர்நேஷனல் பள்ளி ஒன்றை திறந்துள்ள முதலமைச்சரின் மனைவி ரினிக்கி புயன் சர்மா அந்த பள்ளி துவக்க விழாவில் பேசும் போது அசாம் முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வா இந்த பள்ளியின் நிறுவனர் என்று கூறியிருந்தார்.

மாநிலத்தின் முதல்வராக இருந்துகொண்டு சர்வதேச பள்ளியை நடத்த முடியுமா ? என்று கேள்வி எழுப்பியுள்ள அசாம் மாநில காங்கிரஸ் கட்சியினர்,

முதல்வரின் நெருங்கிய உறவினர்கள் பெயரில் இயங்கி வரும் ஆர்பிஎஸ் ரியல்டர்ஸ் எனும் நிறுவனம் சட்ட விரோத பணபரிவர்தனையில் ஈடுபட்டுள்ளதாகவும், ஜார்கண்ட் மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், அந்நிறுவனம் மோசடியாக நிலங்களை கையகப்படுத்தி உள்ளது என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அசாம் முதலமைச்சர், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மீது எழுந்திருக்கும் இந்த சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தேசிய செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.