சென்னை: தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பலத்த பாதுகாப்புடன் நீர்நிலை களில் கரைக்கப்பட்டு வருகின்றன.

மாநில தலைநகர் சென்னையில் நாளை விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன. இதனால், சென்னையில் பல இடங்களில் நாளை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் பொதுமக்கள், நாளை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தில் இந்து முன்னணி சார்பில் மட்டும் சுமார் 1 லட்சம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 5600 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்து அமைப்புகள் மற்றும் பல்வேறு குழுக்கள் சார்பிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் வைக்கப்பட்டுள்ள  விநாயகர் சிலைகளை பாலவாக்கம், பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய 4 கடற்கரைகளில் மட்டுமே கரைக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும்,  விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் விநாயகர் சிலைகள் ஊர்வலம்,  எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

விநாயகர் சிலைகளுடன் கொண்ட ஊர்வலம்,  நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர். முக்கிய சந்திப்புகளில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விநாயகர் சிலை ஊர்வலத்தின்போதும் ஒவ்வொரு வாகனத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னையில் வைக்கப்பட்டுள்ள வித்தியாசமான மற்றும் பொதுமக்களை கவரும் வகையிலான விநாயகர் சிலைகள் விவரம்:

சென்னையில், சிவன்-பார்வதி மடியில் அமர்ந்து இருப்பது, எலி வாகனத்தில் எழுந்தருளுவது, விஷ்ணு அவதாரத்தில் தோன்றுவது, மயில் வாகனத்தில் அமர்ந்திருத்தல், கொரோனா தடுப்பூசி மீது அமர்ந்திருத்தல், இசை கருவிகளை வாசித்தல், போலீஸ், ராணுவ வீரர் தோற்றம் என பல்வேறு அவதாரங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சென்னை வளசரவாக்கத்தில் ‘ஸ்ரீ அக்னிபத்’ விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ராணுவ சீருடையில், ஏ.கே.-47 ரக துப்பாக்கியுடன் குன்றின் மீது எழுந்தருளிய விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

திரு.வி.க.நகர் கென்னடி சதுக்கத்தில் அண்ணாச்சி பழங்களால் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டள்ளது.

திருவல்லிக்கேணியில் விநாயகரும், அவருடைய சகோதரன் முருகனும் செஸ் காய்களை நகர்த்துவது போன்று வடிவமைக்கப்பட்ட சிலை வைக்கப்பட்டு உள்ளது. இது பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில் அருகே பெருமாள் கோலத்தில் செல்வ விநாயகர் யானையின் நெற்றியின் மீது நின்றவாறு தோன்றும் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

கொளத்தூர் பூம்புகார் நகரில் 3 ஆயிரத்து 600 கலச தேங்காய்களுடன் 40 அடி உயரத்தில் பிரமாண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

மணலி சின்னசேக்காடு காந்திநகரில் 35 ஆயிரம் கலர் பென்சில்கள் மற்றும் 800 ஜாமென்ட்ரி பாக்ஸ்கள் மூலம் 18 அடி உயரத்தில் புத்தகம் படிக்கும் விநாயகர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

மணலி புதுநகரில் இந்து முன்னணி சார்பில் 5 ஆயிரம் வாழைப்பூக்களால் 15 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சிலையின் கிரீடம் அண்ணாச்சி பழத்திலும், காதுகள் வெள்ளை கரும்பு போன்றவைகளை கொண்டும் செய்யப்பட்டு உள்ளது.

திருவொற்றியூர் தேரடியில் 7 அடி உயரத்தில் 21 ஆயிரம் ருத்ராட்சங்கள், மூங்கில் கொம்பு, குச்சிகள், தேங்காய் நார் மற்றும் 101 வலம்புரி சங்குகள் கொண்டு சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர ருத்ராட்ச விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

மதுரவாயல் மார்க்கெட் பகுதியில் சிவன்-பார்வதி முன்னிலையில், அவர்களின் பிள்ளைகளான விநாயகர் மற்றும் முருகன் ஆகியோர் செஸ் விளையாடுவது போன்று தத்ரூபமாக சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் பசு வாகனத்தில் எழுந்தருளிய விநாயகர் சிலையும், புதுப்பேட்டையில் கருட வாகனத்தில் எழுந்தருளிய விநாயகர் சிலையும், தந்தையாரான சிவபெருமான் வேடத்தில் பசு வாகனத்தில் விநாயகர் சிலையும்,

பெரம்பூர் பேப்பர்மில்ஸ் சாலையில் தர்ப்பூசணியால் வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலைகள் அனைத்தும் நாளை (4-ந் தேதி) நீர் நிலைகளில் கரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு 4-ந்தேதி நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.

சென்னையில் விநாயகர் சிலைகளை பாலவாக்கம், பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய 4 கடற்கரைகளில் மட்டுமே கரைக்கவேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையொட்டி, நாளை சென்னையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், அகற்றப்பட்டு, வாகனங்களில் ஏற்றி நீர் நிலைகளில் கரைக்கப்படும். இதனால் சென்னையின் பிரதான சாலைகளில் நாளை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நாளை வெளியே செல்லும்போது,  கவனமுடன் செல்வது நன்மை பயக்கும்.