இந்தியாவைச் சேர்ந்த 34 வயது நிறைமாத கர்ப்பிணி போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் சனிக்கிழமையன்று மரணமடைந்தார்.
எட்டு மாத கர்ப்பிணியான அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவசர சிகிச்சைக்காக லிஸ்பனில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான சாண்டா மரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவில் படுக்கை வசதி இல்லாததால் அதே நகரில் உள்ள சான் பிரான்சிஸ்கோ சேவியர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
மருத்துவமனைக்கு மாற்றுவதற்காக ஆம்புலன்சில் கொண்டு செல்லும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது அதற்கான முதலுதவி மற்றும் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் மருத்துவமனையை அடைந்த அவருக்கு சிசேரியன் செய்யப்பட்டு குழந்தை பிறந்துள்ளது 722 கிராம் எடையுடன் எட்டு மாதத்தில் பிறந்த இந்த குழந்தை தற்போது ஐ.சி.யூ.-வில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து அந்நாட்டு சுகாதார அமைச்சர் மார்டா டெமிடோ ராஜினாமா செய்தார்.
சுகாதார துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் வார இறுதி நாட்களில் அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு சமீபத்தில் விடுமுறை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக மார்டா டெமிடோ மீது விமர்சனங்கள் எழுந்தது.
இந்த நிலையில், “தான் இந்த பதவியில் தொடர தார்மீக உரிமை இல்லை” என்று கூறி செவ்வாயன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக போர்ச்சுகல் பிரதமருக்கு கடிதம் அளித்துள்ளார்.
நிறைமாத கர்ப்பிணி ஒருவர் வெளிநாட்டில் சுற்றுலா சென்ற இடத்தில் மரணமடைந்த செய்தி தற்போது இந்தியாவில் பரபரப்பாகி உள்ளது.