சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழக அரசியல் கட்சி தலைவர்களான இபிஎஸ், ஓபிஎஸ், அண்ணாமலை உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு, வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புனித நாளில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஞானம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமான விநாயகரின் பிறந்தநாள், விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடப்படுகிறது. விநாயகப் பெருமான், விக்னஹர்தராகவும், மங்கலமூர்த்தியாகவும் கருதப்படுகிறார். இந்த தருணத்தில் அன்பு, அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சி ஏற்பட விநாயகனை வழிபடுவோம் என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஞானம் என்பது முக்தியை விரும்புபவருக்கு அறியாமையை அழிக்கிறது. செல்வம் பக்தனுக்குத் திருப்தி அளிக்கிறது. அதனால், ஞானத்தையும், செல்வத்தையும் அளிக்கும் விநாயகரை அனைவரும் வணங்குவோம். யாரிடமிருந்து தடைகள் அழிகிறதோ, யாரிடமிருந்து காரியம் நிறைவேறுகிறதோ, அந்த விநாயகரை நாம் எப்போதும் கும்பிட்டு வணங்குவோம். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஞான முதல்வனாம், வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்கும் முழுமுதற் கடவுளாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடனும், மனமகிழ்ச்சியுடனும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் என் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்னல்களை எல்லாம் பொடிப் பொடியாக்கும் கணபதி; சகல கணங்களுக்கும் தலைமை தாங்கும் விக்னேஷ்வர் ஆகிய விநாயகப் பெருமானை முழு முதலாகத் துதித்து தொடங்கும் எந்த ஒரு செயலும் வெற்றிபெறுவது உறுதி என்பது நம் நாட்டு மக்களின் தொன்றுதொட்ட நம்பிக்கை ஆகும்.
“வேழ முகத்து விநாயகரைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்” என்ற வாக்கிற்கு இணங்க விநாயகர் சதுர்த்தி திருநாளில் மக்கள் அனைவரும், வாழ்வை செழிப்பாக்கும் எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை பக்தியுடன் வழிபட்டு, அவர்தம் கருணையால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி, வாழ்வில் நிறைந்த செல்வமும், நீண்ட ஆயுளும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து, நம் இதய தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் துணைமுதல்வர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஓம் எனும் ஓங்கார வடிவமாய், வினை தீர்க்கும் தெய்வமாய் விளங்கும் முழுமுதற் கடடிணம் ஸ்ரீவிநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடலும், மன மகிழ்வுடனும் கொண்டாடி பகிழவிருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த “விநாயகர் சதுர்த்தி” நல்வாழ்த்துகளை முதற்கண் தெரியிந்துக் கொள்கிறேன். சகல சங்கடங்களையும், தடைகளையும் நீக்க வல்ல விநாயகப் பெருமானை வணங்கிய பின்னர் எந்த செயலைத் தொடங்கினாலும், அந்தச் செயலை வெற்றியுடன் செய்வதற்குரிய மன உறுதியும், நம்பிக்கையும் தானாக ஏற்பட்டு, அந்தக் காரியம் தங்கு தடையின்றி சிறப்பாக முடியும் என்பதும்;
அதன்மூலம் வாழ்வில் வளம் பெருகும், அறிவு மிகும், துன்பங்களுக்கு காரணமான வினைகள் அகலும் என்பதும் மக்களின் இறை நம்பிக்கையாகும். இந்த நன்னாளில், வேண்டுவோர்க்கு வேண்டிய வரந்தைம் கொடுக்கும் கடவுளாகக் கருதப்படும் வேந்து விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்; அன்பும், அமைதியும் நிலவட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்; ஒற்றுமை ஓங்கட்டும்; இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும் பொங்கட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது “விநாயகர் சதுர்த்தி” திருநாள் நல்வாழ்ந்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தொட்டன எல்லாம் துலங்கச் செய்யும், தும்பிக்கை நாயகனின், துங்கக் கரிமுகத்து தூமணியின், விநாயகர் சதுர்த்தி விழா, பண்டிகைகளுக்கு எல்லாம் தொடக்க விழா.பிள்ளையாரில் தொடங்கி அனுமன் ஜெயந்தி வரை தொடரும் விழாக்களை எல்லாம்தான், பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது என்று வழக்கு தமிழிலே, ஒரு சொல்லாடல் பேசப்படுகிறது. அருமையான தமிழில், ஔவைத் தமிழ் மூதாட்டி அருளிச் செய்த, விநாயகர் அகவலின் தொடக்கமே, செந்தாமரை மலர்ப்பாதம் கொண்ட கணபதியே என்றுதான் தொடங்குகிறது.சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாட… எனத் தொடங்கும் விநாயகர் அகவல், தனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா எனக் கேட்ட ஔவையார் தமிழுக்கு செய்த காப்பு.
நம் தேசத்தின் விடுதலைப் போருக்கு வித்திட்ட பண்டிகை விநாயகர் சதுர்த்தி. ஆங்கிலேயர் கண்களை மறைத்து, மக்களைத் திரட்ட, சுதந்திர வேட்கை வளர்க்க, நம் பாலகங்காதர திலகர், விநாயகர் விழாவை பயன்படுத்தியது வரலாறு.புதிய தொடக்கத்தை, புதிய உற்சாகத்தை, புதிய மலர்ச்சியை, புதிய எழுச்சியை, நமக்கெல்லாம் விநாயகர் அருளட்டும். நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் குறைகள் அனைத்தும் நீங்கி, நல்வாழ்வு பெற்று இன்புற்று வாழ இறையருள்புரிய வேண்டி விநாயகரை நான் பிரார்த்தனை செய்கிறேன்.அனைவருக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.