சென்னை: மாநகர மேயர் பிரியா தலைமையில் இன்று மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில்  61 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் துணைமேயர் மகேஷ்குமார், மாநகர ஆணையாளர் ககன்தீப் சிங்பேடி, நிலைக்குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், மாநகராட்சியில் காலியாக உள்ள வணிக வளாக கடைகளின் மூலம் வருவாயை பெருக்க ஒரே முறையில் மெகா ஏலம் விடுவது உள்ளிட்ட 61 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநகராட்சியின் வருவாயை பெருக்க அனைத்து மண்டலங்களிலும் உள்ள வணிக வளாக கடைகளில் காலியாக உள்ள கடைகளை ஒரே முறையில் மெகா ஏலம் விடுவதற்கு அனுமதி கோரும் தீர்மானம், மண்டலம் 4,7 மற்றும் 15ல் ரத்த சுத்திகரிப்பு மையங்கள் குறிப்பிட்ட தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் தொடங்க அனுமதி, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து தட சாலைகளில் ஏற்படும் குழிகள் மற்றும் பள்ளங்களை சரி செய்ய ஒப்பந்தம் கோரும் அனுமதிக்கான தீர்மானம்,   பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வழக்குகளை கையாளுவதற்கு மாதாந்திர தொடர் கட்டணத்துடன் நிலை வழக்கறிஞரை நியமிக்க அனுமதி,

மண்டலம் 6,8,10,13 இல் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான குறிப்பிட்ட நிலங்களை மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக ஒதுக்கீடு செய்வதற்கான அனுமதி, பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறித்து வழங்கப்பட்ட அரசாணை பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைமுறைப்படுத்த அனுமதி கோரும் தீர்மானம்,மூன்று சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வெளியிட்ட அரசாணையை நடைமுறைப்படுத்த அனுமதி கோரும் தீர்மானம், சென்னையில் துருப்பிடித்த மற்றும் பழுதடைந்த தெருவிளக்கு கம்பங்களை புதியதாக மாற்றியமைக்க நிர்பயா நிதி மூலம் பணி மேற்கொள்ள ஒப்பந்தம் வழங்கும் தீர்மானம் உள்ளிட்ட 61 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.