டெல்லி: உச்சநீதிமன்றத்தில் இன்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு, பாபர் மசூதி, குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், 5 நீதிபதிகள் கொண்ட இரண்டு அரசியல் சாசன அமர்வை நியமித்து உள்ளதுடன், அந்த அமர்வுகள் வாரத்தில் மூன்று நாட்கள் தலா இரண்டரை மணி நேரம் செயல்படும் என அறிவித்தார். அதன்படி இன்று அரசியல் சாசன அமர்வுகள் செயல்பட்டது.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், தெஹல்கா பத்திரிக்கைக்கு பேட்டியளித்த போது முன்னாள் தலைமை நீதிபதிகள் ஊழல்வாதி கள் என கூறியிருந்தார். இதையடுத்து அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து, பாபர் மசூதி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
கடந்த 1992-ஆம் ஆண்டு, டிசம்பர் 6-ஆம் தேதி உ.பி.யில் இருந்த பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, குஜராத் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதக் கலவரங்கள் வெடித்தன. அவற்றில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். குறிப்பாக, மும்பை போன்ற நகரங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்களும் நடந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அச்சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
அதுபோல 2002ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பான வழக்கும் முடித்து வைக்கப்பட்டு உள்ளது. குஜராத் கலவரம் தொடர்பாக இழப்பீடு கோரிய வழக்கு, சிபிக்கு மாற்றக்கோரிய வழக்கு உள்பட இது தொடர்பாக அனைத்து வழக்குகளும் காலாவதியாகி விட்டதாக அறிவித்து, முடித்து வைக்கப்படுவதாக தலைமைநீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அறிவித்து உள்ளது.