சேலம்: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், போதுமான அளவு மருத்துவர்கள் இல்லாத சோகம் தொடரும் நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் 2 போலி மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது. இது, தமிழக அரசின் சுகாதாரத்துறை மீது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை என்றும், கிராமப்புறங்களில் பணியாற்றும் பல மருத்துவர்கள் தினசரி பணிக்கு வருவது இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த நிலையில், தினசரி ஆயிரக்கணக்கக்கான பொதுமக்கள் வந்து செல்லும் சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவம் படிக்காத 2 இளைஞர்கள் மருத்துவர் வேடமின்றி வார்டுக்குள் புகுந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முன்வந்த விவகாரம் பெரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவத்தன்று   அரசு மருத்துவமனைக்கு நேற்று 2 இளைஞர்கள் மருத்துவர்கள் போல  டாக்டர் போல் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் அணிந்து கொண்டு வார்டுக்குள் வந்துள்ளனர். அவர்கள் பல வார்டுகளுக்கு சென்று வந்த நிலையில், கண் அறுவை சிகிச்சை மையத்திற்கு சென்று, அங்கிருந்த நர்ஸ்களிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டுள்ளனர். அப்போது செவிலியர் ஒருவர் அவர்களிடம் நீங்கள் யார், எப்போது பணியில் சேர்ந்தீர்கள் என்று விவரம் கேட்டுள்ளார்.

ஆனால், அதற்கு முறையாக பதில் தெரிவிக்காத அவர்கள் 2 பேரும் வேறு வார்டை நோக்கி சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த அந்த நர்ஸ், உடடினயாக  டீன் வள்ளி சத்தியமூர்த்திக்கு தகவல் கொடுத்தார்.  இதையடுத்து அவர் கண் அறுவை சிகிச்சை மையத்திற்கு நேரில் சென்றார். பின்னர் அந்த பகுதியில் சுற்றித் திரிந்த அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரித்தார். அப்போதுதான் அவர்கள் அரசு டாக்டர்கள் இல்லை என்பது தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் பிடித்து அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அந்த இளைஞர்களிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், அந்த 2 நபர்களும் கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. கந்திகுப்பம்  சல்மான் (23), சேலம் தளவாய்ப்பட்டி அருகே உள்ள சித்தர்கோவில்  கார்த்திகேயன் (23) என்பது தெரிந்தது.   சல்மான், கார்த்திகேயன் இருவரும் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ளனர். இருவரும் முகநூல் மூலம் நண்பர்களாகி இருவரும் முகநூலில் பேசிக்கொள்ளும் போது டாக்டர்கள் போன்று பேசுவதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர். அந்த ஆசையில் அவர்கள் மருத்துவமனைக்கு டாக்டர் வேடமிட்டு வந்து நோட்டமிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் சேலம் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவர்கள் யார் யார் பணி செய்கிறார்கள் என்ற விவரங்கள் மருத்துவமனை நிர்வாகம் நோட்டீஸ் போர்டில் தெரியப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.