சென்னை: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நேற்று முதல் நடைபெற்று வந்த நிலையில், இன்று 5% ஊதிய உயர்வு அளிக்க தமிழக அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னையில் அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கான 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான சென்னை குரோம்பேட்டை பணிமனையில் ஊதிய உயர்வு குறித்து 66 தொழிற்சங்கங்களுடன் 7வது கட்டமாக நேற்று முதல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில்,  போக்குவரத்துத் துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, முடிவு ஏதும் எட்டப்படாத நிலையில், இன்று 2வது நாளாக பேச்சுவார்த்தை தொடர்ந்தது. இன்று நடைபெற்ற  தொழிற்சங்கங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதில் 5 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்க தமிழகஅரசு ஒப்புதல் வழங்கியது. அதைத்தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே  14வது ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.  இதில், முக்கிய திருத்தமாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை என்பது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஓட்டுநருக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூ. 2,012 என்றும் அதிகபட்சமாக ரூ. 7,981ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நடத்துநருக்கு குறைந்தபட்சம் ரூ. 1,965 என்றும், அதிகபட்சம் ரூ. 6,640 என்றும் உயர்த்தப்பட்டு கையெழுத்தானது. தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ₹9,329 வரையிலும் ஊதிய உயர்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஊதிய ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த சிஐடியு மாநில செயலாளர் முன்னாள் எம்எல்ஏ சவுந்தரராஜன்,  தங்களின்  பெரும்பாலான கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது  என்று கூறியவர், ஆனால், ஒப்பந்த காலம் 4 ஆண்டுகள் என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் தெரிவித்தார்.