சென்னை: பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கான தேர்வு முடிவு மதிப்பெண் பட்டியலாக 22-ந் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த ஜூன் 20 ஆம் தேதி 12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கு, ஜூலை 25 முதல் ஆக.,1 வரை துணைத்தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வு முடிவுகள் வரும் 22ந்தேதி (திங்கட்கிழமை) இணையதளத்தில் வெளியாகும் என அரசு தேர்வுத்துறை தெரிவித்து உள்ளது. 22ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
துணைத்தேர்வு எழுதிய மாணாக்கர்கள், தங்களது தேர்வு எண் மற்றும் பிறந்ததேதியை பதிவு செய்து ஆன்லைனில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்து உள்ளது. www.age.tn.gov.in இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். துணைத்தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு 24 மற்றும் 25-ந் தேதி ஆகிய 2 நாட்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்து உள்ளார்.