சென்னை: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
காவல்துறையினரால் தாக்குதலால், அவர்களின் உடலில் ஏற்பட்ட ரத்தக்காயம் காரணமாக, அவர்கள் உடுத்திருந்த லுங்கி (கைலி) முழுவதும் ரத்தம் தோய்ந்திருந்ததால், அதை காவல்துறையினர் தூக்கி குப்பை தொட்டியில் தூக்கி வீசியதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
கடந்த 2020 ஜூன் 20 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல் கடை வைத்திருந்த தந்தை, மகன் இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களை கடுமையாக தாக்கி, சிறையில் இருவரும் அடைக்கப்பட்ட நிலையில் ஜூன் 21 ஆம் தேதி மகன் பென்னிக்ஸ் உயிரிழந்துவிட, ஜூன் 23-ந்தேதி அதிகாலை தந்தை ஜெயராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
விசாரணைக் கைதிகளாக இருந்த தந்தை, மகன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காவல்துறை யினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் அவர்கள் மரணம் அடைந்தது ஊர்ஜிதமானது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட காவல்துறையினரை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த கொலை தொடர்பாக பல கட்ட விசாரணைகளை நடத்திய சிபிஐ, ஏற்கனவே 2,027 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த நிலையில், தற்போது மேலும், 400 பக்கங்கள் கூடுதலாக கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.
இந்த புதிய குற்றப்பத்திரிகையைல், சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தந்தை, மகனின் ரத்தம் படிந்த துணிகளை குப்பைத் தொட்டியில் போலீசார் வீசினர் என சிபிஐ தெரிவித்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.