புதுக்கோட்டை: தமிழ்நாட்டின் ஆன்லைன் சூதாட்டம் நிச்சயமாக தடை விதிக்கப்படும் என அமைச்சர் ரகுபதி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டின் ஆன்லைன் சூதாட்டத்தால் பணமிழந்து தற்கொலை முடிவை நாடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் மட்டும் 27பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பாமக தலைவர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார். மத்தியஅரசும், ஆன்லைன் தடை குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என தெரிவித்து உள்ளது. பொதுமக்களும் ஆன்லைன் தடை சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என கோரி வருகின்றனர்.
இந்த நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் சூதாட்டத்தை நிரந்தரமாக ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது சம்பந்தமான விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள் தாங்களாகவே திருந்த வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி தான் ஆன்லைன் ரம்மி குறித்து கருத்து கேட்டுள்ளோம். ஆன்லைன் ரம்மி கருத்து கேட்பு குறித்து இபிஎஸ் கூறுவது நீதிமன்ற அவமதிப்பு என்றவர், அரசு நிரந்தரமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழிக்க நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் நிச்சயம் தடை விதிக்கப்பட்டும் என தெரிவித்தார்.
இதன்பின் பேசிய அமைச்சர், போதை பொருட்களை விற்போர், உறுதுணையாக இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.