சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று பிற்பகல் விசாரணை தொடங்கியது. ஓபிஎஸ் தரப்பு, இபிஎஸ் தரப்பு காரசாரமாக தங்களது வாதங்களை வைத்து வருகின்றனர். நீதிபதியின் கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், தலைமைக்கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை கூட்டலாம் என தெரிவித்துள்ளது. வழக்கின் விசாரணையின்போது நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமான நிலையில், கடந்த ஜூலை 11ந் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில், ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து ஆகியோர், கடந்த ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்தலாம் என்று தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து, இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே 2 வாரங்களில் விசாரித்து தீர்வு காண உத்தரவிட்டது.
இந்த நிலையில், தற்போது உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணை தொடங்கியது. ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ண குமார் ஆஜராகி வாதாடி வருகிறார்.
இந்த நிலையில், பொதுக்குழு விதிகளை பின்பற்றி நடத்தப்பட்டதா? இல்லையா? என்பது குறித்த வாதங்களை முன்வைக்குமாறு ஓபிஎஸ் தரத்திற்கு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.
இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில், ஜெயலலிதா நிரந்தர பொது செயலாளர் ஆக நீடிப்பார் என 2017 பொது குழுவில் முடிவு செய்யப்பட்டது. 2017 பொது குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்ந்தெடுக்க விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது என்றும், பொது செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை திருத்த முடியாது என்றும், பொதுச் செயலாளராக மீண்டும் ஒருவரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்றும், கட்சியின் அடிப்படை விதி, அதில் திருத்தம் செய்ய முடியாது என தெரிவித்தார்.
மேலும், தேர்தல் விதி திருத்தத்துக்கு, பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்காவிட்டால் பதவிகள் காலியாகி விடும் என்றால், அது பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் பொருந்தும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானால், பொருளாளர், தலைமை கழக செயலாளர் அந்த பதவிகளுக்கான பணிகளை மேற்கொள்வர் என ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதிமுகவில் இரு பதவிகளும் காலியாக உள்ள நிலையில் பொதுக்குழுவை யார் கூட்டலாம்? நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு கட்சி விதிகளின்படி தலைமைக்கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை கூட்டலாம் என தெரிவிக்கப்பட்டது.
(ஏற்கனவே அதிமுக பொதுக்குழுவை தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்ட உரிமை இல்லை என ஒபிஎஸ் தரப்பு கூறி வந்த நிலையில், தற்போது அவர்களுக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க உள்ள உறுப்பினர்களுக்கு தனித்தனியே தலைமை கழக நிர்வாகிகள் சார்பாக அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. வழக்கமாக அதிமுக பொதுச்செயலாளர், பின்னர் ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக பொதுக் குழுவிற்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக தலைமைக் கழக நிர்வாகிகள் பெயரில் அழைப்பிதழ் அனுப்பபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது கடந்த விசாரணைகளின்போது, நிதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.)
தொடர்ந்து காரசாரமான வாதங்கள் நடைபெற்றன. இதையடுத்து, வழக்கை நாளை காலைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.