சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற 10வது சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்ற நிலையில், இறுதிபோட்டியில் வெற்றி பெற்று பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. ஓபன் பிரிவில் இந்திய ஏ மற்றும் இந்திய பி அணிக்கும் மகளிர் பிரிவில் இந்திய ஏ அணிக்கும் இருப்பதால் இன்றைய ஆட்டம் இந்த மூன்று அணிகளுக்குமே முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதன்முறையாக இந்தியாவில், அதிலும் தமிழ்நாட்டின் புராதன நகரமான மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 186 நாடுகள் பங்கேற்றுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 11 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது.
நேற்று நடைபெற்ற ஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10-வது சுற்றில் ஓபன் பிரிவில் இந்தியா 2-வது அணி உஸ்பெகிஸ்தான் அணியுடன் மோதியது. 10-வது சுற்று ஆட்டத்தில் இந்தியா 2 அணியில் உள்ள தமிழக வீரர் பிரக்ஞானந்தா உஸ்பெகிஸ்தான் வீரர் சிந்தரோவ் ஜாவோகிருடன் மோதினார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 77-வது நகர்த்தலில் சிந்தரோவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இன்று 11வது சுற்று நடைபெறுகிறது. போட்டியின் நிறைவு நாளான இன்று நடக்கும் ஆட்டங்களின் முடிவே ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லப் போவது யார் என்பதை தீர்மானிக்க உள்ளன.
இதுவரை நடந்துள்ள 10 சுற்றுகளின் முடிவில், ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான், அர்மேனியா தலா 17 புள்ளிகளுடன் முதல் 2 இடங்களில் உள்ளன. இந்தியா-2, இந்தியா-3, அமெரிக்கா தலா 16 புள்ளிகள் பெற்று அடுத்த இடங்களில் உள்ளன. மகளிர் பிரிவில் 10 சுற்றுகளின் முடிவில் இந்தியா 17 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. போலந்து, அஜர்பைஜான், உக்ரைன், ஜார்ஜியா அணிகள் தலா 16 புள்ளிகளுடன் அடுத்த இடங்களில் உள்ளன.