டெல்லி: அக்னிபாத் திட்டம் முலம் இந்திய கடற்படையில் சேர 82 ஆயிரம் பெண்கள் உள்பட 9.5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே இந்திய விமானப்படையில், சுமார் 3 ஆயிரம் பணியிடங்களுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அக்னிபாத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் 4 ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றும் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் 14 மத்திய அரசு அறிவித்தது. வடமாநிலங்களில் போராட்டங்கள் நடந்தபோதிலும், இதை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.  மத்தியஅரசு அறிவித்த அக்னிபாத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பின்னர் அரசு கொடுத்த விளக்கம் மற்றும் வயது தளர்வு காரணமாக, போராட்டம் நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, ராணுவத்துக்கான ஆள்சேர்ப்புக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்திய கடற்படையில் காலியாக உள்ள  3 ஆயிரம் கடற்படை பணிக்கு விண்ணப்பம் கோரியது. இந்த பணிக்கு 9.55 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களில் 82 ஆயிரத்து 200 பேர் பெண்கள் ஆவர் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.