காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ரூ.30 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் மாவட்ட வருவாய் அலுவலர், 2 வட்டாட்சியர்கள் உட்பட 5 பேரை மாவட்ட சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை அரசு அலுவலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் வடகால் மற்றும் பால் நல்லூர் கிராமங்களில் விஜிபி நிறுவனத்தால் வினோத் நகர் என்ற பெயரில் வீட்டுமனை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் பங்குதாரர் ராஜதாஸ் என்பவர் மனை பிரிவுகளின் பொது உபயோகத்திற்காக சுமார் 16.64 ஏக்கர் நிலத்தை ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு, கடந்த 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் அலுவலகத்தில் பதிவு செய்த வழங்கி உள்ளார்.
ஆனால், அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில், நிலத்தை விஜிபி அமலதாஸ் ராஜேஷ் என்பவர், அரசு அதிகாரிகள் உதவியுடன் மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் விசாரணை நடத்திய காஞ்சிபுரம் மாவட்ட சிபிசிஐடி காவல்துறையினர், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், அவருக்கு துணையாக இருந்த சார் பதிவாளர் ராஜதுரை, வட்டாட்சியர்கள் எழில் வளவன், பார்த்தசாரதி மற்றும் உதவியாளர் பெனடின் ஆகியோர் மீது11 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிறையிலடைத்தனர்.
உயர் பதவியில் உள்ள அரசு அதிகாரிகள் இதுபோன்று நிலமோசடியில் ஈடுபட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மோசடி செய்த நிலத்தின் மதிப்பு 30 கோடி ரூபாய் என தெரிய வருகிறது.