அகமதாபாத்

குஜராத்தை சேர்ந்த சில மாணவர்கள் ஆங்கிலமே தெரியாமல் அமெரிக்கா சென்றுள்ளது கடும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.

வெளிநாடுகளில் படிக்க மற்றும் பணி புரியச் செல்வோருக்கு ஆங்கில திறனறிவு தேர்வான ஐ இ எல் டி எஸ் என்னும் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  இந்த தேர்வு மிகவும் கடினமானதாகும்.  இந்த தேர்வில் அபரிமிதமான ஆங்கிலப் புலமை பெற்றவர்கள் கூட 7 மதிப்பெண்கள் பெறவே மிகவும் சிரமப்படுவார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்குச் சட்ட விரோதமாகச் செல்ல குஜராத்தை சேர்ந்த 6 ஆண் மாணவர்கள்  முயன்றதால் அவர்கள் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களிடம் அமெரிக்க நீதிபதிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.  ஆனால் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால் விசாரணையில் தடுமாறி உள்ளனர்.

இதையொட்டி இந்தி மொழி பெயர்ப்பாளர்கள் உதவியுடன் விசாரணை நடந்தது.  விசாரணையின் போது இவர்கள் ஐ இ எல் டி எஸ் தேர்வில் 6.5 முதல் 7 வரை மதிப்பெண் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.  ஆங்கிலம் நன்கு தெரிந்தவர்களே சரியாக மதிப்பெண்கள் பெற முடியாத தேர்வில் இவர்கள் 7 மதிப்பெண்கள் வரை பெற்றது கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

இதையொட்டி இந்த மாணவர்களுக்குக் குஜராத் மாநிலத்தில் நடந்த ஐ இ எல் டி எஸ் தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.  அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.