சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூறிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என தமிழகஅரசுக்கு நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. மேலும், உரிய நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது.
நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கில், ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின்போது, நீர் நிலை புறம்போக்கு இடங்களில் எந்தவித அரசு அலுவலகங்களும் கட்டபடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொர்ந்து, முக்கியமான நீர் நிலைகளின் எல்லைகளை நிர்ணயித்து எல்லை கற்கள் நடப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆக்கிரமிப்புகளை தடுப்பதற்கு கடுமையாக நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு உரிய நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு ரூ.25,000 அபராதம் விதித்தனர். மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூறிய நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தவில்லை என்றால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகும் படி உத்தரவிட நேரிடும். சம்மந்தப்பட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் ஊதியம் பெற அனுமதிக்க முடியாது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
10 நாட்களில் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி அறிக்கை தாக்கல் செய்வதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின்போத, தமிழகஅரசு உத்தரவாதம் அளித்தபடி, நீர்நிலை ஆக்கிரமிப்பு தடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டிய நீதிமன்றம், ஆக்கிரமிப்பாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்று அவர்களை வெளியேற்றுவதில் பாரபட்சம் காட்டக்கூடாது என்றும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்கக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தவில்லை என்றால் தலைமை செயலாளர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.