சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், மாநகராட்சி பள்ளிகளில் 500 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் உள்பட 98 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கமிஷனர் ககன்தீப் சிங்பேடி, துணை மேயர் மகேஷ்குமார் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இன்றைய கூட்டத்தொடரின் தொடக்கத்தில், வீட்டு வரி உயர்வு, மின்உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, கூட்டம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது, மாமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு தேவையான நடவடிக்கை மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். மழைநீர் கால்வாய் அமைப்பதில் பணி தொடர்பாக கேள்விக்கு பதில் அளித்த மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடடி, மழைநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க முதலமைச்சர் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து உள்ளார். இந்த அதிகாரிகள் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் பணிகளின் முன்னேற்றம் குறித்து தெரிவித்து வருகின்றனர். மழை நீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பேசிய தி.மு.க. கவுன்சிலர் தனசேகரன் மாமன்ற கூட்டத்தில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பேச அனுமதி உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, “அவர்களும் மக்கள் பிரதிநிதி. எனவே மாநகராட்சி கூட்டத்தில் மக்கள் பிரச்சினை பற்றி பேச உரிமை வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
கவுன்சிலர் கிருஷ்ண மூர்த்தி கூறும்போது, “மாநகராட்சி தெருக்களில் உள்ள தெரு விளக்கு மின் கம்பங்கள் வழியாக சாலை யின் குறுக்கே இண்டர்நெட் வயர்கள் தாறுமாறாக தொங்கிக் கொண்டு உள்ளது. இதனை தனியாக மேலே உயரத்தில் பைப் லைன் வாயிலாகவும், பூமிக்கு அடியிலும் சீராக எடுத்துச் செல்ல நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து 98 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதால் அதை நிவர்த்தி செய்ய 500 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயிக்க கல்வி நிலை குழு, பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் முடிவெடுக்கும்.
கடந்த மழையின் போது தி.நகர் வெள்ள பாதிப்புக்கு மாம்பலம் கால்வாய் முக்கிய காரணமாக இருந்தது. இந்த கால்வாயை மிக பிரமாண்டமாக சீர்படுத்தி கரையோர நடைபாதை பூங்கா, அழகுப்படுத்தும் திட்டம் மாநகராட்சியால் உருவாக்கப்பட்டு இருந்தது. அந்த திட்டம் தற்போது மாற்றி அமைக்கப்படுகிறது.
காற்றின் தரத்தை கண் காணிக்கும் நிலையத்தை சென்னை மாநகராட்சி மூலம் ஒரு இடத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் 4 இடத்திலும் அமைக்கும் பணிக்கான மதிப்பீட்டிற்கு ஒப்புதல் வழங்குவது உள்பட 98 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.=