சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்கள், அவர்களின்  சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஜூலை 29) நிறைவு பெறுகிறது.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் சுமார் 440 உறுப்பு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வந்தது. சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாவதால் தாமதம் ஏற்பட்டதால், விண்ணப்பத்திற்கான கால அவகாசம் ஜூலை 27ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மேலும் சான்றிதழ் பதிவேற்றுவதற்கான கால அவகாசமும் 29ந்தேதி வரை அறிவிக்கப்பட்டது.  அதன்படி சான்றிதழ் பதிவேற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள சுமார்  1.5 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு  ஆகஸ்ட் 16 முதல் அக்டோபர் 14-ம்தேதி வரை நடத்தப்படும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம்  அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக மொத்தம் 2 லட்சத்து 11,905 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1.69 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். மேலும், 1.58 லட்சம் பேர் தங்களின் அசல் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளனர்.

இதற்கிடையே மாணவர்கள் பதிவுக் கட்டணம் செலுத்தவும், சான்றிதழ்களை பதிவேற்றவும் இன்றுடன் (ஜூலை 29) காலஅவகாசம் முடிவடைகிறது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் துரிதமாக செயல்பட வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.tneaonline.org என்ற இணையத்தில் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.