சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்த பிரதமர் மோடி, செஸ் கட்டங்கள் பார்டர் கொண்ட தமிழக பாரம்பரிய வேட்டி சட்டையுடன் வந்தார். விமானம் மூலம் விமான நிலையம் வந்தடைந்த பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்துக்கு வருகை தந்தார். அங்கிருந்து கார் மூலம் விழா நடைபெறும் நேரு ஸ்டேடியத்திற்கு வந்தார்.
பிரதமர் மோடிக்கு வழி நெடுகிலும் பாரம்பரிய கலை நிகழ்வுடன் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அதுபோல செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க வரும் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தாரை, தப்பாட்டம், கரகம், காவடி, பரதநாட்டின் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக வரவேற்றனர்.
விழா அரங்கிற்குள் வந்தடைந்த பிரதமர் மோடி அவர்கள் அனைவரையும் பார்த்து கையசைத்தார். அவரை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேஷ்டி, பட்டு சட்டையுடன் கலக்கலாக கலந்துகொண்டுள்ளார்.
பிரதமர் வந்ததும், , ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் உள்பட மூத்த தலைவர்கள், அதிகாரிகள் அரங்கிற்குள் வருகை தந்தனர். அவர்களை அமைச்சர் மெய்யநாதன் வரவேற்றார்.
தொடர்ந்து, தமிழ்த்தாய் மற்றும் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே ஆரம்பமானது. அதனை தொடர்ந்து, பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோரை வரவேற்று அமைச்சர் மெய்யானாதன் வரவேற்புரை வழங்கினார்.