சென்னை; 44வது செஸ் போட்டி தொடக்க விழா ஜவஹர்லால் நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சென்னை வந்தார். அவரை தமிழகஅரசு சார்பில் அமைச்சர்கள் வரவேற்றனர்.
பிரதமர் மோடி அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் செஸ் போட்டி தொடக்க விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளம் வரும் பிரதமர், அங்கிருந்து கார் மூலம் விழா நடக்கும் நேரு ஸ்டேடியம் வருகிறார்.
முன்னதாக விழாவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேஷ்டி , பட்டு சட்டையுடன் வந்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, கார்த்தி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இவ்விழாவில் கண்ணை கவரும் மணல் ஓவியங்களை வரைந்து சாகசம் புரிந்தார் ஓவியர் சர்வம் படேல். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பல்வேறு நாட்டு செஸ் அணியின் கேப்டன்கள் கொடியுடன் அணிவகுப்பு நடைபெற்றது.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடியின் வருகை தாமதமானதால், வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.
சென்னை வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பிரதமரை வரவேற்க நேப்பியர் பாலம் முதல் நேரு விளையாட்டு அரங்கம் வரை சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மத்திய கைலாஷ் பகுதியில் சுற்றுலா, கலை பண்பாட்டு துரையின் சார்பாக தாரை தப்பட்டை ஆட்டம் நடைபெற்று வருகின்றன
அதுபோல செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க வரும் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தாரை, தப்பாட்டம், கரகம், காவடி, பரதநாட்டின் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக வரவேற்றனர்.
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி கிராமத்தில் நடைபெறுகிறது. ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது
இந்த போட்டிகள்,. ஜூலை 28ந்தேதி (இன்று) முதல் ஆகஸ்டு 10ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில், 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இதில் இந்தியா ஓபன் பிரிவில் 3 அணிகளையும், பெண்கள் பிரிவில் 3 அணிகளையும் களம் இறக்குகிறது. மொத்தம் 30 வீரர், வீராங்கனைகள் 6 அணிகளாக களமிறங்குகின்றனர். பெண்கள் பிரிவில் இந்தியா முதல் அணியில் கோனேரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி, தானியா சச்தேவ், பாக்தி குல்கர்னி ஆகிய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.