திருப்பதி
செப்டம்பர் 27 முதல் பக்தர்கள் பங்கேற்புடன் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந் நாட்களில் காலையிலும், இரவிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாகப் பிரம்மோற்சவம் பக்தர்களின்றி நடந்தது.
இந்தாண்டு பிரம்மோற்சவம் வரும் செப்டம்பர் 27ம்தேதி தொடங்கி அக்டோபர் 5ம்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு பக்தர்கள் தரிசிக்கும் வகையில் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. எனவே சுவாமியைத் தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவஸ்தானம் சார்பில் பக்தர்களின் வசதிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகளை நேற்று தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர், எஸ்பி பரமேஸ்வர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர் செய்தியாளர்களிடம்
”கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக தடைபட்ட் வீதி உலா கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாடவீதியில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் பக்தர்கள் அதிகளவில் வர வாய்ப்பு உள்ளது.
எனவே இதைக் கருத்தில் கொண்டு பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.
மேலும் போக்குவரத்து நெருக்கடியின்றி வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்படும். இதில் முதற்கட்டமாகப் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளது. பல ஆய்வுக்குப் பின்னர் மேலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.”
எனத் தெரிவித்துள்ளார்.