டெல்லி: 20 ராஜ்யசபா எம்.பி.க்கள் மற்றும் 4 லோக்சபா எம்.பி.க்கள் உட்பட சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் 50 மணி நேரம் இரவு பகல் போராட்டம் தொடரும் என எம்.பி.க்கள் அறிவித்து உள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, எதிர்க்கட்சிகள் அவையை முடக்கி வருகின்றன. உணவுப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு, சமையல் எரிவாயு உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதையடுத்த கடந்த இரு நாட்களுக்கு முன்பு மக்களவையில் அமளியில் ஈடுபட்ட 4 எம்.பி.க்களை அவைத்தலைவர் இந்த தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்தார். அதுபோல நேற்று மாநிலங்களவையின் மத்திய பகுதியில் வந்து அமளியில் ஈடுபட்ட  திமுக எம்.பி.க்கள் உள்பட 19 எம்பிக்கள் ஒரு வாரம் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இன்று மேலும் ஒரு எம்.பி. இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், 20 ராஜ்யசபா எம்.பி.க்கள் மற்றும் 4 லோக்சபா எம்.பி.க்கள் உட்பட 24 எம்.பிக்கள் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை 50 மணி நேரம் பகல்-இரவு போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.