கொல்கத்தா: குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி யாருக்கும் ஆதரவு  இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.

ஏற்கனவே முடிவடைந்த  குடியசு தலைவர் தேர்தலின்போது, எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக தீவிரமாக பணியாற்றி, தனது கட்சியைச் சேர்ந்த யஷ்வந்தா சின்ஹாவை களமிறக்கினார். ஆனால், இறுதியில் முர்முவுக்கு வாக்களிப்பதாக அறிவித்து எதிர்க்கட்சிகளின் முகத்தில் கரியை பூசினார். தற்போது துணை குடியரசு தலைவர் தேர்தலில், எந்தவொரு கட்சிக்கும் திரிணாமுல் ஆதரவு அளிக்காது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து தனது மமதையை வெளிப்படுத்தி உள்ளார்.

 குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடுவின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்வரும், எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும், மம்தாவின் மருமகனுமான அபிஜித்பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்களில் யாருக்கும் ஆதரவளிப்பதில்லை என கட்சி ஒருமனதாக முடிவு செய்துள்ளது. பாஜக கூட்டணி வேட்பாளரை ஆதரிப்பது குறித்த கேள்வியே எழவில்லை. இரு அவைகளிலும் 35 எம்.பி.க்கள் உள்ள ஒரு கட்சியுடன் முறையான ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் இல்லாமல் எதிர்க்கட்சி வேட்பாளரை முடிவு செய்த விதம் காரணமாக வாக்கெடுப்பில் இருந்து விலகி யிருக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்” என்றார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கி மேற்குவங்கத்தில் 50ஆண்டு கால கம்யூனிஸ்டு ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் மம்தா பானர்ஜி. இவரது அதிரடி அரசியல் மற்றும் ஜெயலலிதாவை போன்ற திமிர்த்தனமான பேச்சுக்கள்  கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருவதுடன் அவரது நம்பிக்கை துரோகமும் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

குடியரசு தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதுபோல அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டவர், திடீரென பாஜக வேட்பாளருக்கு ஆதரவு என எதிர்க்ட்சிகளின் நம்பிக்கையை தகர்த்தெறிந்தார். தற்போது துணை குடியரசுத்தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என அறிவித்து உள்ளார். இவரது நடவடிக்கைள் எதிர்க்கட்சி தலைவர்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.