விவாகரத்து பெற்று பிரிந்த தம்பதிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் குழந்தைகளுடனான உறவுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
பிரிந்த கணவன் குழந்தையைக் காண வரும் போது விருந்தினரை உபசரிக்கும் இந்திய பண்பாட்டை பின்பற்றி அவரை ஒரு மதிற்பிற்குரிய விருந்தினராக நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையின் முக்கிய பகுதியில் உள்ள ஒரே ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் இருவேறு பிளாக்குகளில் குடியிருக்கும் பிரிந்த தம்பதி, தனது 10 வயது மகளை காண அனுமதி கோரி கணவன் தொடர்ந்த வழக்கில் இதுபோல் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்த இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, “இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றம் பெரும்பாலும் குழந்தைகளின் மனநிலையையும் அவர்களது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் தான் தீர்ப்பு வழங்குகிறது.
பெற்றோர் இருவருமே குழந்தையை வளர்க்கும் பொறுப்பை கோரும் போது பல்வேறு காரணங்களையும் ஆராய்ந்து அதில் ஒருவருக்கு உரிமை வழங்கப்படுகிறது மற்றவர் அந்த குழந்தையை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்.
ஆனால் நடைமுறையில் குழந்தையைக் காணவரும் தந்தையின் உணர்வுகளுக்கு யாரும் மதிப்பளிப்பதில்லை மாறாக குழந்தை கண் முன்னே அவருடன் சண்டையிடுவது தான் பெரும்பாலும் நடக்கிறது.
இதனால் வெறுப்பு என்றால் என்ன வென்றே தெரியாத குழந்தைகளின் மனதில் வெறுப்புணர்வு என்ற நஞ்சு விதைக்கப்படுகிறது. இது குழந்தையை தவறாக வழிநடத்துவதற்கு சமமான குற்றமாகும்.
இது குழந்தைக்கு ஒரு பீதியை உருவாக்குவதுடன் அவர் பயமாகவும் உதவியற்றவராகவும் உணர்கிறார். இந்த பாதிப்பு மற்றும் பாதுகாப்பின்மை உணர்வுகள் குழந்தையின் மனதை வாழ்நாள் முழுவதும் பாதிக்கிறது.
ஒரு குழந்தைக்கு மற்ற பெற்றோரை வெறுக்க அல்லது அவரைப் பார்த்து பயப்படக் கற்றுக்கொடுக்கும் ஒரு பெற்றோர் அந்தக் குழந்தையின் மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்திற்கு தொடர்ச்சியான கடும் ஆபத்தை ஏற்படுத்துகிறார். பிள்ளைகளிடம் நட்பாக நடந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் தலையாய கடமையாகும்.
ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோர் இருவருடனும் அச்சுறுத்தலற்ற மற்றும் அன்பான உறவுமுறைக்கான உரிமையும் தேவையும் உள்ளது,
“பிரிவு என்பது ஒரு துரதிர்ஷ்டம், பெற்றோர்களை விட குழந்தைகள் தான் அதிக மனவேதனையும் உணர்ச்சி வலியையும் அனுபவிக்கின்றனர். ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோர் இருவரையும் அணுகி அவர்களின் அன்பையும் பாசத்தையும் அனுபவிக்க உரிமை உண்டு. வாழ்க்கைத் துணைவர்களுக்கிடையில் வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், மற்ற பெற்றோரிடம் செல்ல குழந்தையை தடுக்க முடியாது”
பிரிந்த தம்பதிகளாக இருந்தாலும் ஒருவரையொருவர் அன்புடன் நடத்த வேண்டும், தங்கள் குழந்தைகள் முன் மனித நேயத்துடன் நன்றாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் மரியாதையுடன் நடத்தும்படி கூறியுள்ள நீதிபதி. குழந்தைக்கு மகிழ்ச்சியாக இருக்க மற்றும் ஆரோகியமான சூழலை உணர ஒரு விருந்தினரை உபசரிப்பது போல் அவருக்கு சாப்பிட ஏதாவது கொடுங்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள் என்று அறிவுறுத்தி தீர்ப்பு வழங்கியுள்ளார்.